இந்திய உணவுத் தரக்கட்டுப்பாடு ஆணையம், சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய அறிக்கையில், 'செய்தித் தாள்களில் உணவுப் பொருட்களை மடித்துத் தருவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியது. இதுகுறித்து நுகர்வோர் சங்க தரப்பிலும், மருத்துவத் தரப்பிலும் பேசினோம்.
சந்தான ராஜன், இயக்குநர், இந்திய நுகர்வோர் சங்கம்
''எழுத்துகள் அச்சு செய்யப்பட்ட காகிதத்தில் உணவுப் பொருட்களை வைத்துத் தரும்போது, காகிதத்தில் உள்ள மை உணவுப்பொருட்களில் ஒட்டிக்கொள்கிறது. இது பலருக்கும் வாடிக்கை ஆகிவிட்ட
ஒரு பழக்கம் ஆனாலும், இதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நிறைய. உடல்நலக் கோளாறுகளில் இருந்து அதிகபட்சமாக கேன்சர் வரை ஏற்படுத்தக்கூடியது என, ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே இந்திய உணவுத் தரக்கட்டுப்பாடு ஆணையம், இதைத் தடை செய்யும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
டீக்கடைகள், சாலையோர கடைகள் என மொத்தம் ஒரு கோடி கடைகள் இந்தியாவில் உள்ளன. அரசு தரப்பில் இந்தக் கடைகளுக்கான தரக்கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் கொண்டுவரப்பாட்டாலும், அதை அவர்கள் எந்தளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறி. இன்னொரு பக்கம், சுகாதாரமற்ற கடைகள், உணவுப் பொருட்களை மக்கள் வாங்காமல் புறக்கணிப்பதும், அரசின் நடவடிக்கை வெற்றி பெற அவசியமானது. அரசு, வணிகர்கள், பொதுமக்கள் என மூத்தரப்பும் சமூக அக்கறையுடன் செயல்படும்போதே இதற்குத் தீர்வு கிடைக்குமே தவிர, இது ஒரே நாளில் ஒழிக்கக்கூடிய விஷயமில்லை.''
கவுசல்யா, வாழ்கைமுறை நிபுணர்
''காகிதங்களில் மடித்துத் தரப்படும் உணவுப் பொருட்கள், விரைவில் அதன் தன்மையில் இருந்து சிதைந்துவிடும். உணவில் உள்ள ஈரத்தன்மையை காகிதம் ஈர்த்துவிடுவதால், செரிமானக் கோளாறு ஏற்படலாம். ஆபத்தான விஷயம் என்னவென்றால், காகிதத்தில் உள்ள கார்பன் மை உணவோடு சேரும்போது உணவு, நச்சுப்பொருளாக மாறும் நிலை ஏற்படுகிறது. அது வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப் புண், வாயுத்தொல்லை, புற்றுநோய் போன்ற பாதிப்புகளை தரக்கூடியது. இந்தச் சூழலில், அரசின் இந்த நடவடிக்கை, வரவேற்கத்தக்கது."
டாக்டர் விஜயராகவன், புற்றுநோய் சிறப்பு மருத்துவர்
''பொதுவாக, இரண்டு முறைகளில் உணவுப் பொருட்கள் காகிதத்தில் வைத்துத் தரப்படுகின்றன. ஒன்று, நியூஸ் பேப்பர் மீது ப்ளாஸ்டிக் பேப்பர் வைத்து, இட்லி, தோசை மடித்துத் தரப்படுகிறது.
இதனால் பிளாஸ்டிக் மூலக்கூறுகள் உணவின் வழி உடலினுள் சென்று வியாதியை உண்டாக்குகின்றன. இரண்டாவது, பஜ்ஜி, போண்டா போன்ற பண்டங்கள் செய்தித்தாள், பத்திரிகை போன்ற எழுத்துகள் உள்ள காகிதத்தில் வைத்துத் தரப்படுகிறது. இதனால் அந்த எண்ணெய் காகிதத்தில் உள்ள மையைக் கரைத்து உணவுப் பொருட்களில் ஒட்டவைக்கிறது. வழக்கமாக அல்லது அடிக்கடி சாலையோரக் கடைகளில் சாப்பிடும்போது, 'modified carbohydrates' உருவாகி புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
காகிதம் மட்டுமல்ல, சாலையோரக் கடைகளில் பயன்படுத்தும் எண்ணெயும் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணியே. பொதுவாக, பெரிய ஹோட்டல்களில் சமையலுக்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தமாட்டார்கள். அதை, இந்த சாலையோரக் கடைகளில் வாங்கிவைத்து உணவுப் பண்டங்கள் தயாரிக்கிறார்கள். அப்படி அந்த எண்ணெய் மீண்டும் சூடுபடுத்தப்படும்போதும், மற்றும் தரமற்ற மூலப் பொருட்கள், தூசி, அழுக்கு, கிருமி என சுற்றுச்சூழல் அசுத்தங்கள்... இவை அனைத்தும் சாலையோர கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை ஆரோக்கியத்துக்கு எதிராக ஆக்குகின்றன. அவற்றைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில்லை. மாறாக, நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, புற்றுநோய் உருவாகக் காரணமாகலாம்.''
உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரச்னை என்று சுகாதாரமற்ற இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடலின் மீது அக்கறைகொள்வோம். சாலையோர உணவுகளுக்கு 'பை' சொல்வோம்!
No comments:
Post a Comment