Dec 29, 2016

பெண் அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: நடவடிக்கை எடுக்க ஆத்தூர் போலீசார் தயக்கம்

ஆத்தூர்: உணவு பாதுகாப்பு அதிகாரியை, லாரி ஏற்றிக்கொல்ல முயன்ற சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வழியாக, தெற்குகாடு அசோகன் சேகோ ஆலையில் இருந்து, 22 டன் எடை கொண்ட ஈர கிழங்கு மாவு லோடுடன், நேற்று முன்தினம் இரவு லாரி சென்றது. அதை, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நிறுத்த முயன்றார். டிரைவர் நிறுத்தாமல் சென்ற தால், லாரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த அலுவலர்கள், ஈர மாவு லோடுடன் லாரியை பறிமுதல் செய்து, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர். இதுகுறித்து, ஆத்தூர் போலீசில், 'ஈர மாவு ஏற்றிச்சென்ற லாரி டிரைவர், எங்கள் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டாக்டர் அனுராதா புகார் செய்தார். இரவு, 11:00 மணியளவில், போலீசார் பாதுகாப்புடன், டாக்டர் அனுராதா, வீட்டிற்கு சென்றார். நேற்று, சேகோ ஆலை உரிமையாளர் அசோகன், 'டாக்டர் அனுராதா, உள்நோக்கத்துடன் செயல் படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் செய்தார். அப்புகாருக்கு, சி.எஸ்.ஆர்., ரசீதை, போலீசார் வழங்கினர்.
வரம்பு மீறி...: நேற்று மாலை, 4:30 மணியளவில், அனுராதா புகார் மீது, சி.எஸ்.ஆர்., ரசீது மற்றும் வழக்கு பதிவு செய்யாததால், இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபுவிடம், அவர் கேள்வி எழுப்பியதால், சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அனுராதா, மற்றொரு புகார் மனு எழுதி கொடுத்தார். அப்புகார் மீது, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக, இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு கூறினார். பின், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், லாரியில் இருந்த ஈர மாவை, பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர். ஆத்தூர் போலீசார், உணவு பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகார் மீது, நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் முன்னேற்ற நலச்சங்க மாநில தலைவர் துரைசாமி கூறியதாவது: மழை இல்லாததால், மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளது. கிழங்கு அரவைக்கு தண்ணீர் இல்லாததால், 400 சேகோ ஆலைகளில், 50 மட்டுமே இயங்குகின்றன. மற்றொரு சேகோ ஆலைக்கு, மாவு ஏற்றிச்சென்ற லாரியை, சந்தன கட்டை, செம்மரக்கட்டை கடத்துவதுபோல், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, தகவல் தெரிவிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளாக, சேலத்தில் பணிபுரியும் அனுராதா, தன் அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார். சேகோ ஆலை சங்கத்தினரை மதிப்பதில்லை. நின்றிருந்த லாரியை பிடித்து, லாரி ஏற்ற முயன்றதாக, போலீசில் பொய் புகார் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பரிசோதனை: டாக்டர் அனுராதா கூறியதாவது: மரவள்ளி கிழங்கு தோலுடன் அரவை செய்யும் ஈர மாவு வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, இரு மாதங்களாக, இரவில் லாரியில் ஈரமாவு கடத்தல் நடக்கிறது. லாரியை பிடிக்க முயன்றபோது, டிரைவர், எங்கள் கார் மீது மோதுவதுபோல், அதிவேகமாக சென்றார். விபத்தில் சிக்கியிருந்தால், உயிர் போயிருக்கும். போலீசில், மீண்டும் புகார் மனு கொடுத்துவிட்டு, ஈர மாவு மாதிரி பரிசோதனைக்கு எடுத்துள்ளோம். ஜன., 24ல், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால், ஈரமாவு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment