Jul 10, 2016

தமிழகத்தில் போதை பொருட்கள் ஊடுருவல்: சோதனை சாவடி அலுவலர்களே காரணம் என புகார்


மேட்டூர்: ''தமிழக எல்லையில் உள்ள போக்குவரத்து துறை சோதனை சாவடி அலுவலர்களின் அலட்சியமே, போதை பொருட்கள், தமிழகத்தில் ஊடுருவ காரணம்,'' என, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில், போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில், 18 சோதனை சாவடிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும், சரக்கு லாரிகளை சோதனை செய்வதில்லை. அதிக பாரத்தை கண்டுபிடிக்க எடை கிடையாது. அதனால், பான்பராக், குட்கா, கஞ்சா சாக்லேட் போன்றவை, தமிழகத்தில் எளிதாக ஊடுருவுகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் சுகுமார் கூறியதாவது: போக்குவரத்து துறை கட்டுப்பாட்டிலுள்ள சோதனை சாவடிகளில், சென்னை அடுத்த நொச்சிகுப்பம், வேலூர் அடுத்த திருவலம், கிருஷ்ணகிரி அடுத்த ஒசூர் ஆகியவை முக்கியமானவை. அந்த சோதனை சாவடிகள் வழியாகவே, வடமாநிலங்களில் இருந்து, பான்பராக், குட்கா, கஞ்சா சாக்லேட் போன்ற போதை பொருட்கள் ஏற்றிய லாரி உள்ளிட்ட வாகனங்கள், தமிழகத்துக்குள் நுழைகின்றன. நொச்சிகுப்பம் சாவடி வழியாக மட்டும் தினமும், 5,000க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் தமிழகத்தில் நுழைகின்றன. எல்லை சோதனை சாவடிகளில் சந்தேகத்துக்கு உரிய சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களை சோதனை செய்ய கூட, போதிய அலுவலர்கள் கிடையாது. அதை சாதகமாக்கி, எளிதாக போதை பொருட்கள் பாரம் ஏற்றிய லாரிகள், தமிழகத்துக்குள் நுழைந்துவிடுகின்றன. லாரிகளில் கூடுதல் பாரம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, 18 சோதனை சாவடிகளிலும் எடைமேடை கூட இல்லை. அதற்கு, உயர்நீதிமன்றம் செப்., 30ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. அதற்குள், அனைத்து சாவடிகளிலும் எடைமேடை அமைக்க வேண்டும். காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநிலம் முழுவதும் கடை, குடோன்களில் சோதனை செய்வதற்கு பதிலாக, வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் நுழையும் சரக்கு லாரிகளை ஆந்திரா, கர்நாடகா எல்லையில் உள்ள சாவடிகளில் சோதனை செய்தாலே கஞ்சா சாக்லேட், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்திவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment