Jul 22, 2016

சேலம் மாவட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள போலி சமையல் எண்ணெய் பறிமுதல்

ஆத்தூர்: சேலம் உள்பட, நான்கு இடங்களில், பெட்ரோலிய கழிவில் இருந்து தயார் செய்த, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு உள்பட நான்கு இடங்களில் போலி சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், நேற்று முன்தினம் இரவு, ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது, தம்மம்பட்டி, கடைவீதியில் சீனிவாசன் என்பவரது, 'சீனிவாசா மளிகை', ராஜா என்பவரது, 'சென்னை மளிகை' மற்றும் ஜனப்பிரியா மளிகை ஆகிய மூன்று கடைகள் மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான, செந்தாரப்பட்டியில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தனர். இதில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 112 கேன்கள், பாக்கெட் ஆயில் என, மொத்தம், 8,000 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்து, மூன்று பேருக்கும், 'நோட்டீஸ்' வழங்கினர். இதுதவிர, ஆறு மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா கூறியதாவது: பெட்ரோலிய குருடு ஆயில் கழிவில் இருந்து, போலி சமையல் எண்ணெய் விற்பனை செய்ய வைத்திருந்ததாக, தம்மம்பட்டியில், 8,000 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம், லீபஜாரில் உள்ள, தங்கவேலு என்பவரிடம், கடலை, நல்லெண்ணெய் வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறினர். இன்று (நேற்று), சேலத்தில் ஆய்வு செய்தபோது, 250 டின்களில் இருந்த, 4,500 லிட்டர் எண்ணெய், 500 பாக்கெட்டுகளில், 5,000 லிட்டர் உள்பட மொத்தம், 10 ஆயிரம் லிட்டர் போலி எண்ணெய் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment