Mar 25, 2016

சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி: குளிர்பான தொழிற்சாலைக்கு 'நோட்டீஸ்'

ஆத்தூர்: ஆத்தூரில், குளிர்பானத்தை சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்த தொழிற்சாலையின், உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார கடைகளில், காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, அவரது தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று, ஆத்தூரில் உள்ள கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உற்பத்தி தேதி போன்ற, விபரம் இல்லாத குளிர்பானம் இருந்தது கண்டறிப்பட்டது. தொடர்ந்து, 'லவ் ஸ்பாட்' எனும், குளிர்பான உற்பத்தி தொழிற்சாலையில், அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில், தேதி, முகவரி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில பாட்டில்களில், தவறான எண் பதிவு செய்திருந்ததால், 'உரிய விளக்கம் அளிக்கும் வரை, குளிர்பானம் உற்பத்தி செய்ய கூடாது' என, உரிமையாளர் மகாலிங்கத்துக்கு, மாவட்ட நியமன அலுவலர் 'நோட்டீஸ்' வழங்கினார்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: ஆத்தூர் 'லவ் ஸ்பாட்' குளிர்பான தொழிற்சாலையில், சுகாதாரமற்ற முறையில் குளிர்பானம் உற்பத்தி செய்கின்றனர். பணியாளர்கள், கையுறை, தலைக்கவசம் அணியவில்லை. கெமிக்கல் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால், உரிமையாளருக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. குளிர்பான உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment