Feb 10, 2016

உணவு பாதுகாப்பு உரிமம் பெற வணிகர்களுக்கு 3 மாத அவகாசம்

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், வணிகர்கள் உரிமம் பெறவும், பதிவு செய்யவும், மத்திய அரசு, மே, 4 வரை, மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது.
நுகர்வோருக்கு உணவுப் பொருட்கள் தரமானதாக கிடைக்க, மத்திய அரசு, 2006ல், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை இயற்றியது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, 2011ல் அமலுக்கு வந்தது. ஆண்டுக்கு,12 லட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்கள், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும்; அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், உரிமம் பெற வேண்டும்.
இந்த விதிமுறைகள், 'காலத்திற்கேற்றதாக இல்லை; விதிமுறைகளில் திருத்தம் தேவை' என, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில், உரிமம் பெறவும், அனுமதி பெறவும், ஆறு மாத அவகாசம் தரப்பட்டது. பின், அது நீட்டிக்கப்பட்டு, ஆறாவது முறையாக தரப்பட்ட, ஆறு மாத அவகாசம், பிப்., 4ல் முடிந்தது.'விதிமுறைகள் திருத்தப்படாததால் மீண்டும் அவகாசம் வேண்டும்' என, தமிழக வணிகர்கள் வலியுறுத்தினர். இதையேற்ற மத்திய அரசு, மே, 4 வரை, மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது.
இரு குழுக்கள் அமைப்பு
சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. 'அவகாசம் தரப்பட்டுள்ள, மூன்று மாதத்திற்குள், விதிமுறைகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை தர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, விதிமுறைகள் திருத்தம் தொடர்பாக, மத்திய அரசு, இரண்டு குழுக்களை அமைத்துள்ளதால், விரைவில் வணிகர்கள் எதிர்பார்த்த திருத்தம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
- ஜெயபிரகாசம், தலைவர்,தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்.

No comments:

Post a Comment