Jan 17, 2016

ஆலைகளில் ஸ்டார்ச் உற்பத்தி அதிகரிப்பு: மூட்டை விலை ரூ. 300 வரை சரிந்தது

நாமகிரிப்பேட்டை: ஜவ்வரிசி விலை உயராததால், சேகோ ஆலைகளில், ஜவ்வரிசி உற்பத்தியை குறைத்துவிட்டு, தற்போது ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரித்ததால், அதன் விலை மூட்டை ஒன்றுக்கு, 300 ரூபாய் வரை குறைந்தது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 350 சேகோ ஆலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆலையிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1,000 மூட்டை மரவள்ளி கிழங்கு அரைக்கப்படுகிறது. இதன் மூலம், மில் ஒன்றில், 100 மூட்டை ஜவ்வரிசி தயார் செய்து, பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, வடமாநிலங்களில் ஜவ்வரிசி தேவை குறைந்ததால், சேலம் சேகோ மார்க்கெட்டில் ஜவ்வரிசி விலை (குவிண்டால்), 2,600 ரூபாய் வரை விலைபோனது. இதற்கிடையே, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் நடவடிக்கைகளை கண்டித்து, சேகோ வியாபாரிகள், ஜவ்வரிசி ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி மூட்டை தேங்கியது. அதுமட்டுமின்றி, ஜவ்வரிசி உற்பத்தி செலவுடன் ஒப்பிடும்போது, மூட்டைக்கு, 200 ரூபாயிலிருந்து, 350 ரூபாய் வரை, நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தற்போது சேகோ ஆலைகளில் கிழங்கு அரைப்பதை குறைத்துக்கொண்டனர்.
இதுகுறித்து, நாமக்கல் சேகோ ஆலை அதிபர்கள் கூறியதாவது: கிழங்கு மூட்டை, 400 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. ஜவ்வரிசிமூட்டை, 3,600 ரூபாய்க்கு விற்றால் தான் சோகோ ஆலைகளுக்கு கட்டுப்படியாகும். தற்போது, ஜவ்வரிசி மூட்டைக்கு, 350 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளோம். ஜவ்வரிசி தயாரிப்பை விட, ஸ்டார்ச்சை அரைத்து காய வைத்து விற்றுவிடலாம் என்பதால், அனைத்து மில்களிலும், ஸ்டார்ச் தயாரிப்பு துவங்கியுள்ளது. கடந்த மாதம், 2,200 ரூபாய்க்கு விற்ற ஸ்டார்ச் மூட்டை, தற்போது, 1,900 ரூபாய்க்கு தான் விலை போகிறது. அதுவும், மூட்டைக்கு, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment