Oct 13, 2015

எய்ம்ஸ் மருத்துவமனை பிரெட் பாக்கெட்டில் உயிருடன் எலி

நாட்டின் முதன்மை மருத்துவ நிறுவமனமான எய்ம்ஸில் சீல் வைக்கப்பட்ட பிரெட் பாக்கெட்டிலிருந்து உயிருடன் ஒரு எலி வெளியே குதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரொட்டி பாக்கெட்டில் உயிருடன் எலி இருந்ததையடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ரொட்டி சப்ளை செய்த பான் நியூட்ரியெண்ட்ஸ் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது எய்ம்ஸ் நிர்வாகம்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “நார்-சத்து அதிகமுள்ள பான் நியூட்ரியண்ட்ஸ் நிறுவனத்தின் சீல் வைக்கப்பட்ட ரொட்டி பாக்கெட்டிலிருந்து உயிருடன் எலி ஒன்று வெளியே வந்தது. இதனையடுத்து பான் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது” என்றார்.
இந்நிறுவனம், பிரெட், பிஸ்கட்கள், கேக் மற்றும் சில உணவுப்பண்டங்களை தயாரித்து இந்தியா மற்றும் அயல்நாட்டு சந்தைகளில் விற்று வருகிறது.
தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்துள்ளது. இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை பான் நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீஸின் நகல் தி இந்து (ஆங்கிலம்) வசம் கிடைத்தது, அதில், “29.7.2015 அன்று பான் நிறுவனம் உற்பத்தி செய்த சீல் வைத்த பிரெட் பாக்கெட்டைத் திறந்த போது அதிலிருந்து உயிருடன் எலி ஒன்று வெளியே வந்தது. இதனையடுத்து 9.9.2015 அன்று விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

No comments:

Post a Comment