Aug 15, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு 9: குடிநீரில் பூச்சிக்கொல்லி கண்காணிக்கப்படுகிறதா?


பாட்டில் குடிநீர் எப்படிப்பட்ட உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்த்தோம். அதற்கு அடிப்படையாக இருந்தது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ.) நடத்திய ஆய்வு.
பாட்டில் குடிநீரில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பது தொடர்பான பகுப்பாய்வுக்காக, டெல்லியில் விற்பனை செய்யப்படும் 17 பாட்டில் குடிநீர் மாதிரிகளையும், மும்பையில் விற்பனை செய்யப்படும் 13 பாட்டில் குடிநீர் மாதிரிகளையும் சி.எஸ்.இ. சேகரித்தது. இரண்டு வகையான பூச்சிக்கொல்லிகள் இருக்கின்றனவா என்று சி.எஸ்.இ. ஆய்வகம் பரிசோதனை மேற்கொண்டது. ஒன்று ஆர்கனோகுளோரின், இன்னொன்று ஆர்கனோபாஸ்பரஸ்.
பரிசோதனை முடிவில் மிகவும் பொதுவாகக் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி எச்சங்கள் லிண்டேன், டி.டி.டி., மாலத்தியான், குளோர்பைரிஃபாஸ். பெரும்பாலான மாதிரிகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்தன. பாதுகாப்பான குடிநீருக்கான தரநிர்ணயத்தை மோசமாக மீறும் வகையில், பல மாதிரிகளில் ஐந்து விதமான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்தன.
நமக்கு என்ன பிரச்சினை?
டெல்லியில் சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு பாட்டில் குடிநீர் மாதிரியும் ஐரோப்பிய பொருளாதாரக் குழு நிர்ணயித்துள்ள அதிகபட்ச அளவைவிடவும், 36 மடங்கு அதிகப் பூச்சிக்கொல்லி எச்சத்தைக் கொண்டிருந்தன. இதில் பிஸ்லெரி, கின்லே போன்ற நிறுவனங்களும் அடக்கம் என்று சி.எஸ்.இ. தெரிவிக்கிறது. எப்படியிருந்தாலும் அது டெல்லியில் 13 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பரிசோதனை தானே, அதனால் நமக்கு என்ன ஆகப் போகிறது என்று நினைக்கலாம்.
நம்மூரிலும் அதே நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மாதிரிகளில் அதிகப் பூச்சிக்கொல்லி எச்சம் இருந்ததற்குக் காரணம், பசுமைப் புரட்சி மிகவும் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்ட பஞ்சாப், ஹரியாணாவுக்கு அருகில் அந்த மாநிலம் இருப்பதைச் சொல்லலாம். தமிழகமும் பசுமைப் புரட்சியைப் பரவலாக நடைமுறைப்படுத்திய ஒரு மாநிலம்தான் என்பதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே நிறுவனத்தின் டெல்லியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்கும், மும்பையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்கும் இடையே பூச்சிக்கொல்லி எச்சத்தின் அளவில் வித்தியாசம் காணப்படுகிறது. இமாசல பிரதேசத்தில் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரில் பூச்சிக்கொல்லி எச்சம் குறைவாக இருந்துள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் குடிநீர் ஆதாரம் மாறுபடுவதில் இருந்து, அங்கே சுத்திகரிக்கப்பட்ட பின்பு கிடைக்கும் குடிநீரிலும் பூச்சிக்கொல்லி எச்சத்தின் அளவு மாறுபடுவது உண்மைதான். ஆனால், பூச்சிக்கொல்லி எச்சமே இல்லை எனும் நிலை இல்லை.
எந்தக் கட்டுப்பாடும் இல்லை
ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் குடிநீருக்கான தரத்தை உறுதிப்படுத்துவதாக இல்லை. சாதாரணக் குடிநீரில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதைக் கட்டுப்படுத்தும் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (Bureau of Indian Standards - BIS) விதிமுறைகளிலும் தெளிவில்லை. அந்த அமைப்பு வகுத்துள்ள முறைப்படி பரிசோதனை மேற்கொண்டால், பாட்டில் குடிநீரில் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி எச்சம் இருந்தால் மட்டுமே கண்டறிய முடியும்.
ஆனால், மிகக் குறைந்த அளவு பூச்சிக்கொல்லி எச்சம் இருந்தாலும் நம் உடலுக்குப் பிரச்சினைதான். ஏனென்றால், குடிநீர் என்பது சுவாசத்துக்கு அடுத்தது. எல்லா நேரமும் தேவைப்படக்கூடியது; உணவைவிட அதிகமாக உட்கொள்ளப்படுவது; உடலின் பணிகளைச் சீராக வைத்திருப்பது. அதிலேயே பிரச்சினை என்றால், உடலுக்கு ஏற்பட உள்ள ஆபத்தின் அளவும் அதிகமாகத்தானே இருக்க முடியும்.
'பாட்டில் குடிநீரில் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கக்கூடாது' என்று பி.ஐ.எஸ். பொத்தாம்பொதுவாகத் தெரிவிக்கிறது. அதேநேரம், பாட்டில் குடிநீரில் கண்டறிய முடியாத அளவுக்குப் பூச்சிக்கொல்லி எச்சம் இருக்கலாம் என்று தெளிவில்லாமல் கூறியுள்ளது. ஆனால், சி.எஸ்.இ. பரிசோதனை செய்த பாட்டில் குடிநீர் மாதிரிகளோ, நீர்நிலைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்படாத குடிநீருக்கான தரத்துடன்கூட இல்லை.
முழுமையாக அகற்றவில்லை
பாட்டில் குடிநீர் மாதிரிகளை மட்டுமல்லாமல், குடிநீர் சுத்திகரிக்கும் நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படுவதற்கு முந்தைய தண்ணீரைச் சி.எஸ்.இ. ஆய்வகம் பரிசோதித்தது. அதிலிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் இருந்த பூச்சிக்கொல்லிகளும், சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பாட்டில் குடிநீரிலும் ஒரே மாதிரிப் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதற்கு இதுவே அத்தாட்சி.
எடுக்கப்படும் தண்ணீரில் இருந்து சுத்திகரிப்பு நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி எச்சங்களை அகற்றுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்கின்றன. ஆனால், முழுமையாக அகற்றுவதில்லை. பூச்சிக்கொல்லி எச்சங்களை நீக்குவதை உத்தரவாதப்படுத்தும் எந்தக் கடுமையான அரசு விதிமுறைகள் இல்லாமல் இருப்பதும், இதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது.
கண்காணிக்கப்படாத விதி
சி.எஸ்.இயின் பரிசோதனை முடிவுகளை அடுத்து, பாட்டில் குடிநீரின் தரக்கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், அதிகபட்சப் பூச்சிக்கொல்லி எச்சம் தொடர்பான விதிமுறைகளை ஜூலை 2003-ல் மத்திய அரசு வகுத்தது. அதன்படி தனிப்பட்ட ஒரு பூச்சிக்கொல்லி எச்ச அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 0.0001 மில்லிகிராமும், மொத்தப் பூச்சிக்கொல்லி எச்ச அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 0.0005 மில்லிகிராமும் இருக்கலாம் என்பது விதி.
ஆனால், இந்த விதிமுறைகள் நடைமுறையில் எப்படிக் கடைப்பிடிக்கப்படுகின்றன? இந்த விதிமுறைகளை மீறியதாக இதுவரை எந்த நிறுவனமாவது பிடிபட்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம், ‘இல்லை’ என்ற ஒற்றை பதில்தான் இருக்கிறது. அப்படியானால், வெறுமனே விதிமுறைகளை வகுத்துவிட்டு, அரசு பேசாமல் இருப்பதால் என்ன பயன்?
பாட்டில் குடிநீரில் இருக்கும் பூச்சிக்கொல்லி எச்சம், ஏற்கெனவே மோசமாக உள்ள பொதுச் சுகாதாரப் பிரச்சினை மோசமடைவதற்கு மிகப் பெரிய அளவில் வழிகோலும். குடிநீரை அதிகம் குடிப்பதாலும், உடலில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் நஞ்சு நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் என்பதாலும், பாட்டில் குடிநீருக்கான கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதுதான், இதற்கு ஒரே தீர்வு. நிலத்தடி நீர் சுரண்டப்படுவதைத் தடுக்கவோ, சுகாதாரமான தண்ணீர் விநியோகத்திலோ தீவிரம் காட்டாத அரசு, பாட்டில் குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதில் இனிமேலாவது அக்கறை காட்ட வேண்டும்.
ஆரோக்கியமான தண்ணீர் எது?
நம் உடலில் 55 - 75 சதவீதம் தண்ணீர்தான். இந்தச் சமநிலை குலைந்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, தினசரிக் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். பாதுகாப்பான தண்ணீர் எப்படிக் கிடைக்கும். விளக்குகிறார் டாக்டர் கு. கணேசன்:
l நாம் குடிக்கப் பயன்படுத்தும் எந்த ஒரு தண்ணீரையும் அது புட்டியில் அல்லது கேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் சுத்தமான பருத்தி துணியில் வடிகட்டி, குறைந்தது 10 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து ஆற வைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியம். இதுதான் குடிநீரின் சுத்தத்துக்கு நம்பகமானது.
l தண்ணீரை மைக்ரோவேவ் ஓவனில் கொதிக்கவைப்பது இன்னும் நல்லது என்று கருதப்படுகிறது. விரைவாகவும் கொதிக்க வைத்துவிடலாம்.
l ஏற்கெனவே, சுத்தப்படுத்தப் பட்டதாகக் கூறிக் கொண்டுவரப்படும் கேன் மற்றும் பாட்டில் தண்ணீரை இப்படி மீண்டும் கொதிக்கவைப்பதால் அதில் உள்ள தாதுச்சத்துகள் குறைந்துவிடுமோ அல்லது அழிந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். நமக்குத் தேவைப்படுகிற தாதுகளின் அளவு மிக மிகக் குறைவுதான். எனவே, கொதிக்க வைப்பதன் மூலம் நமக்குத் தேவையான அளவுக்கான தாதுகள் எஞ்சியிருக்கும்.
l கிணற்றுத் தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த விரும்புகிறவர்கள், அதைக் கொதிக்கவைப்பதற்கு நேரம் இல்லை என்று கருதினால் இப்படிச் செய்யலாம். நீங்கள் பயன்படுத்த இருக்கிற தண்ணீரில் உள்ள குளோரின் அளவை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள். அது ஒரு சதவீதமாக இருக்குமானால், ஒரு காலன் தண்ணீருக்கு 40 சொட்டு குளோரின் ஊற்றுங்கள். அது 6 முதல் 8 சதவீதமாக இருக்குமானால் 8 சொட்டு குளோரின் அல்லது 9 முதல் 10 சதவீதமாக இருக்குமானால் 4 சொட்டு குளோரின் என்ற கணக்கில் தண்ணீரில் ஊற்றிக் கலந்து, அரை மணி நேரம் கழித்துக் குடிக்கப் பயன்படுத்தலாம்.
l தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு அயோடின் மாத்திரை இருக்கிறது. அது தயாரிக்கும் நிறுவனத்தைப் பொருத்து, அதை பயன்படுத்த வேண்டும். இந்த மாத்திரையைத் தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் கழித்துப் பயன்படுத்த வேண்டும். தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் இந்தச் சுத்திகரிப்பு முறையைப் பின்பற்றுவதற்கு முன் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment