Jul 28, 2015

விவசாயிகள் அனைவருக்கும் தரச் சான்றிதழ் சாத்தியமா?

தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் காய்கறிகளில் பெருமளவில் பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுத்தன்மை உள்ளது என்று சொல்லி வருகிறது கேரள அரசு.
இதனால் கேரளா எல்லைக்குள் நுழையும் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்ளை அனுமதிக்க, கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அம்மாநில அரசு. கடந்த வாரத்தில், கேரள மாநில எல்லையில், 'நச்சுத்தன்மை கலந்த காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்.. தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே காய்கறி வாகனங்களை அனுமதிப்போம்!' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் காய்கறிகளை அனுப்புவதில் முன்னணியில் இருக்கிறது திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட். தமிழகத்திலேயே பெரிய காய்கறி சந்தைகளுள் ஒன்றான ஒட்டன்சத்திரத்துக்கு சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். கேரள அரசின் தற்போதைய நிலைப்பாட்டால், இச்சந்தைக்கு காய்களை கொண்டு வரும் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரியளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.


இதையடுத்து, ஒட்டன்சத்திரம் சந்தையின் காய்கறி வியாபாரிகள் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட, உணவு பொருள் பாதுகாப்புத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை இணைந்து ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுக்கள் மூலம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தரச்சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் ஷாம்இளங்கோ, "கேரள அரசின் கெடுபிடிகளைச் சமாளிக்கும் வகையில் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு தரச்சான்று வழங்கப்படும். நாள்தோறும் காய்கறிகளின் மாதிரி எடுக்கப்பட்டு அவை மதுரைக்கு அனுப்பப்படும். அங்கு உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு தரத்தன்மை குறித்து சான்று வழங்கப்படும். காய்கறிகளை சாகுபடி செய்த விவசாயிகளின் விவரங்களையும் காய்கறிகளோடு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.
சோதனையின்போது, காய்கறிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் வேளாண்மைத்துறை மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரசாயனப் பயன்பாட்டை குறைக்கச் சொல்லி அறிவுறுத்தப்படும். அதோடு உரக்கடைகளிலும் ஆய்வு செய்யப்படும்" என்றார்.


இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சிலரிடம் பேசியபோது, "வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை அனுப்ப முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க கேரளா முடிவு செய்துள்ளது. இப்போது உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் வந்துள்ள இந்த அறிவிப்பு கொஞ்சம் தெம்பைக் கொடுத்துள்ளது. என்றாலும், இந்த மார்க்கெட் மாலை வேளைகளில்தான் கூடும். காலையில் பறிக்கும் காய்கறிகளை மதியம் மூன்று மணியளவில் மார்கெட்டுக்கு விவசாயிகள் கொண்டு வருவார்கள். அவற்றை ஏலம் விட்டு இரவுக்குள் காய்கறிகளை கேரளாவுக்கு லாரிகளில் ஏற்றிவிட வேண்டும். இந்நிலையில், இந்த ஆறு, ஏழு மணிநேரத்துக்குள் சாம்பிள் எடுத்து மதுரைக்கு அனுப்பி தரச்சான்றை வாங்குவது எந்த வகையில் சாத்தியம் என்று தெரியவில்லை.
கேரள அரசுடன் பேசி இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் அவகாசம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதற்குள் விவசாயிகளிடம் உரப்பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதி விவசாயிகளை உடனடியாக இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது சாத்தியமே இல்லாத விஷயம். ஆனால், உரக்கடைக்காரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை மட்டும் விற்பனை செய்யச் சொல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யவும் தடைவிதிக்க வேண்டும்" என்றனர்.
தமிழக வேளாண்துறை உடனடியாக களத்தில் இறங்கி இந்த பிரச்னைக்கு முடிவு கட்டவேண்டும். உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனையை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரப்பயன்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
இதே காய்கறிகளைத்தான் தமிழக மக்களும் சாப்பிடுகிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, படிப்படியாக இயற்கை விவசாய முறையை பின்பற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசும் இயற்கை வேளாண் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
அரசு மனது வைப்பது எப்போது?

No comments:

Post a Comment