Jul 4, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு- 4: கசக்கத் தொடங்கிய மருந்து


தேசிய அளவில் விற்பனையாகும் வணிகரீதியான தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் அதிக அளவில் இருப்பதைச் சி.எஸ்.இ. (அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) நடத்திய ஆய்வு ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியது. அதற்குப் பிறகுதான் வணிகரீதியான தேனில் ஆன்ட்டிபயாட்டிக் கலந்திருக்கக்கூடாது என்பது தொடர்பான விதிமுறையை உருவாக்கும் நடவடிக்கையில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கவனம் செலுத்த ஆரம்பித்தது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாவது 12 நிறுவனங்களுடைய தேன். இதில் 10 உள்நாட்டு நிறுவனங்கள், 2 இறக்குமதி செய்யப்படுபவை. இந்தியாவில் வணிகரீதியில் அதிகம் விற்பனையாகும் தேன் வகை, டாபர் ஹனி. வைத்தியநாத் ஆயுர்வேதப் பவன் நிறுவனத்தின் வைத்தியநாத் காட்டுப்பூ தேன் அதற்கு அடுத்ததாக அதிகம் விற்பனை ஆகிறது. ஹிமாலயா காட்டுத் தேன், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் பதஞ்சலி தூய்மைத் தேன் போன்றவை இவற்றுக்குப் பிறகு வருகின்றன. அத்துடன் காதி, மெசன்ஸ், கோல்டு, உமாங், ஹிம்ஃபுளோரா கோல்ட், ஹிட்கரி போன்ற நிறுவனங்களின் தேனும் சந்தையில் கிடைக்கின்றன.
இவற்றைத் தவிர ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகும் காப்பிலானோ நிறுவனத்தின் தேனும், ஸ்விட்சர்லாந்தின் நாரிம்பெக்ஸ் ஏ.ஜி. நிறுவனத்தின் தேனும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அது வேற, இது வேற
இந்த நிறுவனங்களின் தேன் மாதிரியைச் சி.எஸ்.இ. ஆய்வகம் 2010-ம் ஆண்டில் பரிசோதித்துப் பார்த்தபோது, 12 நிறுவனங்களின் தேன் மாதிரியில் 11-ல் பல்வேறு ஆன்ட்டிபயாட்டிக்குகள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் தேன் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதித் தரத்துக்கும் இல்லை. இதிலிருந்து உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனுக்குத் தனித் தரக்கட்டுப்பாட்டையும், ஏற்றுமதி செய்யப்படும் தேனுக்குத் தனித் தரக்கட்டுப்பாட்டையும் மேற்கண்ட நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இயற்கை தேன் உற்பத்தியாளர் ஒருவரிடம் இது தொடர்பாகப் பேசியபோது, 'தேனுக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நம் நாட்டு நிறுவனங்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை. ஏற்றுமதி செய்வதற்கு முன் குறிப்பிட்ட சரக்குத் தொகுதியில் இருந்து எடுக்கப்படும் தேன் மாதிரிகள், ஏற்றுமதி கண்காணிப்பு மன்றத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது அப்போது கண்டறியப்பட்டால், அந்தச் சரக்குத் தொகுதிக்கு உடனடியாகச் சீல் வைக்கப்படும். அதேநேரம், சம்பந்தப்பட்ட தேனுக்கு அக்மார்க் முத்திரையைப் பெற்றிருந்தால், அந்த உற்பத்தியாளர் சரக்கை மீட்டெடுத்து உள்நாட்டில் விற்பனை செய்ய முடியும். ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கொண்ட தேனை உள்நாட்டில் விற்பனை செய்யத் தடை இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சன நிலை' என்று குறிப்பிட்டார்.
அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட தேன் பாட்டில்கள் சிறந்தவை என்று நம்ப வேண்டாம். ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேனிலும், ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட நாடுகளின் தரக் கட்டுப்பாட்டை மீறியதாகவே இருக்கின்றன.
ஒன்றுக்கும் மேலே
தேசிய அளவில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாபர், வைத்தியநாத் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தேனிலும் குறைந்தபட்சமாக 2 ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்ததாக அதிகம் விற்பனையாகும் தேன் வகைகளில் குறைந்தபட்சமாக 3 ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருந்ததைச் சி.எஸ்.இ. நடத்திய பரிசோதனை உறுதி செய்கிறது.
இந்தத் தேன் பாட்டில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருப்பதற்குக் காரணம், வெவ்வேறு இடங்களில் பெட்டியில் வளர்க்கப் பட்ட தேனீக்களின் கூட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட தேனின் கலவையாக அவை இருக்கலாம் என்பதுதான். ஒவ்வொரு இடத்திலும் தேனீ வளர்ப்பில் வித்தியாச வித்தியாசமான ஆன்ட்டி பயாட்டிக்குகள் கொடுக்கப்பட்டி ருக்கலாம் அல்லது தேனில் கலக்கப்பட்டி ருக்கலாம். எனவே, வணிகரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் ஒரே இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதில்லை என்பது தெளிவாகிறது.
விற்பனையாகும் பெரும்பாலான வணிக ரீதியிலான தேன் பாட்டில்களில் இமயமலை அடிவாரத்தில் உள்ள செழிப்பான காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டது என்றோ, சுந்தரவனக் காடுகளில் சேகரிக்கப்பட்டது என்றோ அச்சிடப்பட்டிருக்கும். பல நிறுவனங்கள் காஷ்மீர் தேன் என்றும் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், அதெல்லாம் வெறும் விளம்பரம் மட்டுமே, உண்மையில்லை என்று சுட்டிக்காட்டுகிறது சி.எஸ்.இ. ஆய்வு முடிவு.
என்னென்ன ஆன்ட்டிபயாட்டிக்?
தேனீ வளர்ப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆன்ட்டிபயாட்டிக்குளாக சி.எஸ்.இ. ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டுவது: Oxytetracycline (தேனீக்களில் பாக்டீரியத் தொற்றைத் தடுக்க), Chloramphenicol (பல நாடுகளில் கால்நடை வளர்ப்பில் தடை செய்யப்பட்டது), Ampicillin (கால்நடை மருந்து, அதேநேரம் தேனீக்களுக்குப் பரிந்துரைக்கக்கூடாது), Enrofloxacin (மாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இப்போது தேனீக்களுக்கும் தரப்பட்டுவருகிறது), Ciprofloxacin (கோழி வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது), Erythromycin (கோழி வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது, தற்போது தேனீக்களுக்கும் தரப்படுகிறது).
பெரும்பாலான தேன் வகைகளில் ஆக்சிடெட்ராசைக்கிளின் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 2 தேன் வகைகளில் ஆக்சிடெட்ராசைக்கிளின் 10 மடங்குக்கு மேலும், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட குளோரம்ஃபீனிகால் 12 மடங்குக்கு மேலும் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
குழந்தைகள் ஜாக்கிரதை
தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதால் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தான் பிரச்சினை அதிகம். ஏனென்றால், இவர்களுக்குத்தான் வைரல் தொற்றுகள் பெரும்பாலும் ஏற்படும். அதற்குச் சிகிச்சையாக ஆன்ட்டிபயாட்டிக் கொடுக்க வேண்டி வரும். அப்போது உடலில் தொற்றிய நுண்ணுயிர்களை ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் அழிக்கின்றன.
அதேநேரம் ஆன்ட்டிபயாட்டிக் கலந்த தேனை ஒருவர் தொடர்ந்து உட்கொண்டுவந்திருந்தால், நோய் வந்த நேரத்தில் தரப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து உரிய முறையில் செயலாற்றாது. ஏற்கெனவே உடலில் சேர்ந்துவிட்ட ஆன்ட்டிபயாட்டிக்குகளால், உடலுக்குள் புகுந்த உடனேயே நுண்ணுயிர்கள் அதிக எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகின்றன. அதற்குப் பிறகு சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை ஒருவர் உட்கொள்ளும் போது, அதிக எதிர்ப்புசக்தி கொண்ட நுண்ணுயிர்கள் மட்டுப்பட மறுக்கின்றன. இதுவே Antibiotic Resistance அல்லது கிருமிகள் பெறும் எதிர்ப்பு சக்தி. இந்தப் பிரச்சினை தேசிய அளவிலும் மாநில அளவிலும் தீவிரமடைந்துவருகிறது.
அது மட்டுமல்லாமல் உடலில் அதிகப்படியாகச் சேரும் ஆன்ட்டிபயாட்டிக் ரத்தம் தொடர்பான நோய்களையும், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, பல் போன்றவற்றில் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
சட்டம் தடுக்கவில்லை
சி.எஸ்.இ.யின் ஆய்வுக்குப் பிறகு தேனில் ஆன்ட்டிபயாட்டிக்கோ, பூச்சிக்கொல்லிகளோ இருக்கக்கூடாது என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அறிவித்தது. தேனில் ஆன்ட்டிபயாட்டிக்குகளை தடை செய்யும் கோடெக்ஸ், அமெரிக்க எப்.டி.ஏ., ஐரோப்பிய யூனியன் தரக்கட்டுப்பாடுகள் நம் நாட்டுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்தது.
தேன் உற்பத்தியின் எந்தக் கட்டத்திலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஜூன் 2012-ல் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தடை விதித்தது. தேனில் ஆன்ட்டிபயாட்டிக் கலந்திருப்பதைத் தடுப்பது தொடர்பான வரைவு விதிமுறைகளைக் கடந்த டிசம்பர் 2014-ல் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. வரையறுத்துள்ளது. ஆனால், இது இன்னமும் அரசாணையாக வெளியிடப்படவில்லை.
தடுப்பதற்கான நிரந்தர வழி
ஆன்ட்டிபயாட்டிக் மாசுபாடு நம் உடலைத் தாக்காமல் இருக்க வேண்டுமானால் தேனீ, ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க ஆன்ட்டிபயாட்டிக் மருந்தைப் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு மட்டும் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்த விலக்கு அளித்து, மற்ற அனைத்து வகைகளிலும் அதன் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சைக்காக ஒரு கால்நடைக்கு ஆன்ட்டிபயாட்டிக் கொடுக்கப் படும்போது, அதை வெளிப்படையாக அறிவிக்கும் முத்திரையுடன் விற்பனை செய்ய வேண்டும். அல்லது அவற்றை உணவுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மட்டுமே ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டை, நமது உணவுச் சங்கிலியில் இருந்து முற்றிலும் தடுக்கும்.

No comments:

Post a Comment