Jun 6, 2015

உணவு சர்ச்சை: 2 நிமிஷம் யோசிக்கலாமே!


கையடக்க வாக்மேனிலிருந்து அதிவேகப் புல்லட் ரயில்வரை உலகுக்கு ஜப்பான் அளித்த கொடைகள் ஏராளம். ஜப்பான் மக்களிடம் 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஜப்பான் கண்டுபிடித்த பொருட்களிலேயே சிறப்பான பொருள் ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்'தான் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் பெரும்பாலானவர்கள் வாக்களித்திருந்தனர். ஜப்பான் மக்கள் மட்டுமல்ல, உலகைக் கவர்ந்த உடனடி உணவு வகைகளில் நூடுல்ஸுக்குத் தனியிடம் உண்டு.
ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு
இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஜப்பானில் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அப்போது அவர்களுக்கு அந்நியமான பிரெட்டை சாப்பிட ஜப்பானிய மக்கள் வலியுறுத்தப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய, சுவையான, சீக்கிரம் கெட்டுப்போகாத, அதற்கெல்லாம் மேலாக ஜப்பானிய மக்கள் பாரம்பரியத்திலிருந்து விலகாத உணவு ஒன்று தேவை என்று உணர்ந்தார் மோமோஃபுகு அண்டோ. அப்போது அவர் கண்டறிந்ததுதான் உடனடி நூடுல்ஸ். இப்படியாக ஜப்பானில் அறிமுகமாகி, உலகம் முழுவதும் அவசரத்துக்குக் கைகொடுக்கும் உணவாக உடனடி நூடுல்ஸ் மாறிவிட்டது.
‘இரண்டே நிமிடங்களில் சமைத்துவிடலாம்' என்ற அடையாளத்துடன் எளிதான மாலை சிற்றுண்டியாக நெஸ்லே நிறுவனம் ‘மேகி' என்ற உடனடி நூடுல்ஸை 1980-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குழந்தைகளை இலக்காகக்கொண்டு உடனடி நூடுல்ஸ் விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் சமீபகாலமாக இதை விளம்பரப்படுத்தினர்.
காரீயம், எம்.எஸ்.ஜி. ஆபத்து
இன்றுவரை அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நூடுல்ஸ் பிராண்டான மேகியின் டேஸ்ட் மேக்கரில் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். காரீயம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது என்பதால், கற்றல் குறைபாடுகள், நடத்தை குறைபாடுகளை அது உருவாக்கலாம். மேலும் பல உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
உடனடி நூடுல்ஸின் டேஸ்ட் மேக்கரில் காரீயம் மட்டுமல்லாமல் மோனோ சோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி.) என்ற உப்பும் அதிகப்படியாக இருப்பது தெரியவந்துள்ளது. உணவுப்பொருட்கள் தரம் மற்றும் உணவு கூட்டுப்பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் (2011)-ன்படி செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படக்கூடாது. அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும், இந்த மோனோ சோடியம் குளூட்டமேட் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.
வந்தது தடை
மேகி நூடுல்ஸில் காரீயம், எம்.எஸ்.ஜி. அளவுக்கு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதால் உத்தரப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, டெல்லி, கேரள மாநிலங்களில் அரசு விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் மேகி நூடுல்ஸை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளன அம்மாநில அரசுகள்.
டெல்லியில் உள்ள அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) 2012-ல் நடத்திய பரிசோதனையில், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மேகி நூடுல்ஸில் கூடுதலான உப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு பாக்கெட் நூடுல்ஸில் 3 கிராம் உப்பு இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் நமக்குத் தேவையான உப்பின் அளவே ஆறு கிராம்தான்.
“ஒரு பாக்கெட் நூடுல்ஸை ஒருவர் சாப்பிட்டால், முழு நாளும் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் இருக்கும் அதிகபட்ச உப்பால் உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அவை தரும் சத்தில்லாத கலோரிகளும் உடலைப் பாதிக்கக்கூடியவை" என்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் திட்ட மேலாளர் அமித் குரானா.
இந்தியச் சந்தையில் விற்கப்படும் உடனடி நூடுல்ஸில் வைட்டமின் சத்துகள் உள்ளதாகவும் விளம்பரங்கள் வருகின்றன. சிறிதளவுகூட நார்ச்சத்து இல்லாத உணவால் மற்ற எந்தச் சத்தையும் தர முடியாது. 70 சதவீதம் மாவுச்சத்தைக் கொண்ட நூடுல்ஸை ஆரோக்கியமான உணவு என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் அமித்.
சாப்பிடுவதில் என்ன இருக்கிறது?
ஒரு டின்னிலோ, பாக்கெட்டிலோ, குப்பியிலோ அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட-செறிவூட்டப்பட்ட உணவில் கலந்திருக்கும் பொருட்கள் குறித்தும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் குறித்தும் லேபிளில் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். அத்துடன் தவிர்க்கப்பட வேண்டிய உப்பு, கொழுப்பு போன்றவற்றை ஒரு வாடிக்கையாளர் தினசரி எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் லேபிளில் இருந்தாக வேண்டும்.
நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகியும், தான் வாங்கும் ஒரு உணவுப் பொருளைப் பற்றி ஒரு வாடிக்கையாளர் முழுமையாகத் தெரிந்துகொண்டு தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் எதையும் அரசு வகுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
குழந்தைகளே இலக்கு
உடனடி நூடுல்ஸ் தொடங்கி அனைத்து உடனடி உணவு வகைகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களும் குழந்தைகளையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எது ஆரோக்கியமான உணவு என்பதை முடிவுசெய்யும் முதிர்ச்சியற்றவர்கள் குழந்தைகள். அவர்களை முதன்மை வாடிக்கையாளர்களாகக்கொண்டு செய்யப்படும் விளம்பரங்கள் சார்ந்து, அரசு சில கட்டுப்பாடுகளை விதிப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை.
நாம் சாப்பிடும் உணவின் ஆரோக்கியம் தொடர்பாக அரசு மற்றும் உணவு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது இப்பிரச்சினைக்குத் தீர்வளிக்கப் போவது இல்லை. வண்ணமயமான விளம்பரங்களைப் பார்த்துப் பாக்கெட் பாக்கெட்டாகச் சமையலறையை நிறைக்கும் பெரியவர்களும் பெற்றோர்களும் இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது உடனடி நூடுல்ஸ் சர்ச்சை.

No comments:

Post a Comment