Mar 26, 2015

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை பதுக்கி வைக்கப்பட்ட ‘கார்பைடு’ கற்கள் பறிமுதல்


சென்னை, 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் விழிப்புணர்வு சோதனை நடத்தினர். அப்போது சில பழக்கடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட ‘‘கார்பைடு’’ கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
தொடர் புகார் 
சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் ‘கார்பைடு’ கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது என்று உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தபடி இருக்கிறது. 
இந்தநிலையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையாளர் டாக்டர் வாசகுமார் தலைமையில் சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன், அதிகாரிகள் ஏ.சதாசிவம், மணிமாறன், ஜெபராஜ், சுந்தர்ராஜன், இளங்கோவன், ராஜா உள்ளிட்டோர் சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு வந்தனர். பின்னர் ஒவ்வொரு பழக்கடைக்கும் சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கவேண்டாம் என்று ‘மெகா போன்’ மூலம் அறிவுறுத்தினர். 
‘திடீர்’ சோதனை 
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் சில கடைகளில் ‘திடீர்’ சோதனையிட்டனர். சோதனையில், அந்த கடைகளில் ‘கார்பைடு’ கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இதையடுத்து அந்த கடைகளில் இருந்த ‘கார்பைடு’ கற்களும், அதனால் பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர். 
செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவது குற்றம் என்றும், அத்தகைய செயல்களில் வியாபாரிகள் ஈடுபட வேண்டாம் என்று வாசகங்கள் அடங்கிய பேனர்கள் பழச்சந்தையின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது. 
தடை 
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘‘உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் ஒழுங்கு முறை விதிகள் 2011-ன் படி கால்சியம் ‘கார்பைடு’ கற்களை கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவு உபாதை, வயிற்றுபோக்கு உள்ளிட்ட அஜீரண கோளாறுகள் ஏற்படுவதுடன், புற்றுநோய்க்கு ஒரு காரணியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்களில் வியாபாரிகள் ஈடுபடுவது குற்றமாகும்’’, என்றார்.

No comments:

Post a Comment