Feb 23, 2015

தர்பூசணியில் ஊசி மூலம் மருந்து செலுத்தினால் 5 ஆண்டு சிறை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

கடலூர், பிப். 22:
கோடைக்காலம் தொடங்கிவிட்டால் வீதிகளில் கொட்டப்பட்டு விற்பனைக்கு வருகிறது தர்பூசணி. விற்பனையை அதிகரிக்க செய்வதற்காக சிலர், முறைகேடாக சிவப்பு நிறமாக மாற்றும் மருந்துகளான எரித்ரோசின், கார்மாய்சின் ஆகியவற்றை தர்பூசணியில் ஊசி மூலம் செலுத்துவதாக வந்த தகவல், பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. நகரங்களில் வியாபாரிகள் ஊசி மூலம் தர்பூசணிக்குள் இந்த மருந்தை செலுத்தி விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த மருந்து தொடர்ச்சியாக உடலுக்குள் சென்றால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது.
எனவே உணவு பாதுகாப்பு துறையினர் இது போன்ற முறைகேடான செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடலூரில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மஞ்சக்குப்பம், முதுநகர், செம்மண்டலம் உள்பட பல்வேறு இடங்களில் தர்பூசணி விற்பனை செய்யும் இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் அலுவலர்கள் சுப்ரமணியன், நந்தகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள் லென்ஸ் மூலம் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்து ஊசி குத்தப்பட்டுள்ளதா என சோதனை நடத்தினர்.
பின்னர் டாக்டர் ராஜா கூறியதாவது: தர்பூசணி இயற்கையான சிவப்பை விட கூடுதல் சிவப்பாக இருந்தால் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தர்பூசணிகளில் ஊசி மருந்து செலுத்தப்படவில்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊசி மூலம் தர்பூசணி பழங்களில் மருந்து செலுத்தினால் சட்டபூர்வ நடவடிக்கை பாயும், ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

No comments:

Post a Comment