Feb 6, 2015

கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஓட்டல்கள், பார்களில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை சுகாதார குறைபாடு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் கெடு


கோவில்பட்டி, பிப். 6:
கோவில்பட்டியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான பார்கள், எண்ணெய் நிறுவனங்கள், விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் சுகாதாரத்தை கடைப்பிடிக்காவிட்டால் சீல் வைக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் எச்சரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) முத்து ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், டாஸ்மாக் பார்கள், டீக்கடைகள், பெட்டிக் கடைகள், கல்லூரி விடுதிகள், எண்ணெய் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரிச்சாமி, பொன்ராஜ், முத்துகுமார், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளிராஜ், காஜாமுகைதீன், சீனிராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மதுபான பார்களில் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை அப்புறப்படுத்தினர். மேலும் ஓட்டல்களில் உள்ள சமையலறைகள் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஒரு ஓட்டலில் உள்ள குளிர்சாதன பெட்டிக்குள் சிவப்பு கலர் சாயம் பூசப்பட்ட 15 கிலோ சிக்கனை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஓட்டல்களில் உள்ள கழிவுகளை பிளாஸ்டிக் பேரல்களில் மூடாமல் போட்டு வைத்திருப்பதை கண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், பேரல்களின் மேற் பகுதியில் மூடி போட வேண்டும் என உத்தரவிட்டார்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறுகையில், �கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உணவகங்கள், பார்கள், எண்ணெய் நிறுவனங்கள், பெட்டி மற்றும் டீக்கடைகள், கல்லூரி விடுதிகள், டயர் கம்பெனிகள் உள்ளிட்ட 18 நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் தேவையற்ற பொருட்கள் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதில் சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் 5 நிறுவனங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்த நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் குறைகளை சரிசெய்யா விடில் சீல் வைக்கப்படும்� என்றார்.


கோவில்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

No comments:

Post a Comment