Jan 21, 2015

"உணவுப் பொருள்களில் கலப்படம் செய்தால் சிறை'


உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோருக்கு சிறை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை தாங்கி பேசியது:
உணவு பாதுகாப்புத் துறையின் ஒன்றிய அலுவலர்கள் அனைவரும், மதிய உணவு மற்றும் அங்காடி திட்டத்தில் வழங்கும் உணவுகள் குறித்து தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்க வேண்டும். அனைத்து கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை செய்து, தரமற்ற பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் குறைவான மற்றும் பாதுகாப்பில்லாத உணவுப் பொருள்களை விற்பனை செய்தது தொடர்பாக இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் 45 வழக்குகள் தொடரப்பட்டு, ரூ.2.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் மளிகைக் கடைகள், உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், அரசு நிறுவனங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும். பாதுகாப்பற்ற, கலப்படமான உணவு என்று ஆய்வில் தெரியவந்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை பெற்றுதர வழிவகை செய்ய வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில் பயன்படுத்தும் பாத்திரம் மற்றும் தண்ணீர் சுத்தமாக, சுகாதாரமாக உள்ளதா என தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சமையலறை,அங்கு வழங்கப்படும் முட்டைகளை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்ய வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோர கடைகளில் வழங்கப்படும் உணவுகளை பரிசோதனை செய்ய வேண்டும். அங்கு வழங்கப்படும் அசைவ உணவையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மருத்துவத்துறை துணை இயக்குநர் மீரா, திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) டி.சாமுண்டீஸ்வரி, மதிய உணவு திட்ட அலுவலரின் நேர்முக உதிவயாளர் கே.சரோஜாதேவி, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர்கள், விழுப்புரம் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு குழும தலைவர் நூர்அஹமது, உணவக உரிமையாளர் சங்க தலைவர் சுப்புராமன், உணவு வணிக சங்க பிரதிநிதிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment