Jan 23, 2015

அபராதம் வசூலித்தால் மட்டும் போதாது கலப்படக்காரர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்

விழுப்புரம், ஜன. 23:
தமிழகத்தில் மக்களுக்கு தரமான உணவு பொருட்களை விற்பனை செய்யவும் வகையிலும், கலப்படம், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை உருவாக்கப்பட்டது. மாவட்டம் தோறும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒட்டல்கள், கடைகள் என மக்கள் உணவு அருந்தும் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை, குடோன்களிலும் ஆய்வு செய்து கலப்படத்தை தடுக்க வேண்டும். தரமான பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது இவர்களின் பொறுப்பாக உள்ளது.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் போலியான லேபிள்கள் ஒட்டப்பட்டு தரமற்ற பொருட்களும், காலாவதியான, கலப்பட பொருட்களும் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இது குறித்து ஆய்வு செய்யும் உணவு பாதுகாப்பு துறையி னர், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் மட்டும் விதித்து அவர்களை விடுவிக்கின்றனர். ஆனால் உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சட்டமே உள்ளது. அவர்களிடமும் அபராதம் மட்டுமே வசூலித்து விடுவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அபராத தொகையை செலுத்தி விட்டு, மீண்டும் கலப்பட பொருட்களை விற்பனை செய்ய துவங்கி விடுகிறார்கள்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு சிறை தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ஆட்சியர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் சம்பத் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அரசு துறை நிறுவனங்களான மதிய உணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் வழங்கும் உணவுகளை ஆய்வு மேற்கொண்டு பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து கடைகளிலும் சோதனையிட்டு தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்காணிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தரமற்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் 45 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.2,61,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், நெடுஞ்சாலை ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்பு துறையினர் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பற்ற, கலப்பட உணவு என்று கண்டறியப்பட்டால் அபராதம் வசூலிப்பது மட்டுமின்றி சிறை தண்டனையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சமையற்கூடங்கள் சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதையும் உணவுபாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாமுண்டீஸ்வரி, மதிய உணவு திட்டம் சரோஜாதேவி, நகராட்சி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment