Jan 8, 2015

வியாபாரமும் சுகாதாரமும்!

இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். 25 லிட்டர் கேன்களிலும், பாட்டில்களிலும், சிறிய பிளாஸ்டிக் உறைகளிலும் பரவலாக விற்கப்படும் குடிநீர் தொழிலின் ஆண்டு விற்று வரவு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். அதுமட்டுமல்ல, ஆண்டொன்றுக்கு 40% முதல் 50% வரை வளர்ச்சி காணும் வியாபாரமாகவும் இது மாறிவிட்டிருக்கிறது.
உலக அளவில் 120 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் என்கிறது ஐ.நா.சபையின் அறிக்கை ஒன்று. உலகிலேயே மிக அதிகமான நோயாளிகள் தண்ணீர் மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களே.
இத்துடன் நின்றுவிடவில்லை அவலம். தினந்தோறும் ஏறத்தாழ 6,000 குழந்தைகள் குடிதண்ணீரில் பரவும் கிருமிகளால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாளொன்றுக்கு 1,600 பேர் மாசுபட்ட தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள்.
இனி சென்னையின் நிலைமைக்கு வருவோம். சமீபத்தில் சென்னை மாநகராட்சியால் நடத்தப்பட்ட ஆய்வு, வட சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்படும் குடிநீர், உபயோகத்திற்குத் தகுந்ததல்ல என்று கண்டறிந்திருக்கிறது. குடிநீர் வாரியம் விநியோகம் செய்யும் குடிநீரில் தொற்றுநோய் ஏற்படுத்தும் பல நச்சு நுண்ணுயிரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மாதவரம், திருவொற்றியூர், மணலி, ராயபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 22 மாதிரிகளில் 12 மாதிரிகள் உபயோகத்திற்கு உகந்ததல்ல என்று கண்டறியப்பட்டிருக்கிறது. தண்டையார்பேட்டை கோட்டத்திலுள்ள தண்ணீர் குழாய்களிலிருந்து 2014-15
நிதியாண்டில் இதுவரை எடுக்கப்பட்டிருக்கும் 499 மாதிரிகளில் 157 மாதிரிகள் உபயோகத்திற்குத் தகுந்ததல்ல என்று தெரிய வந்திருக்கிறது.
தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் தொடர்ந்து வர நேர்ந்தபோதுதான் மாநகராட்சி விழித்துக் கொண்டு, குடிநீர் விநியோகக் குழாய்களில் உள்ள தண்ணீரை சோதனையிடத் தீர்மானித்தது. தண்ணீரில் நோய்க் கிருமிகள் காணப்படுவதற்கும் நச்சு நுண்ணுயிரிகள் உருவாகி வளர்வதற்கும் முக்கியமான காரணம், குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர் கலப்பதாகக்கூட இருக்கும். மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் குடிநீர் விநியோகக் குழாய்கள் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த இரும்புக் குழாய்கள் துரு பிடித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். குடிநீர் வடிகால் வாரியத்தால் இந்தக் குழாய்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டியது மிகமிக அவசியம் என்று தெரிவிக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
குடிநீர் வாரியக் குடிநீர் விநியோகம் ஒருபுறம் இருக்க, தனியார் துறையினரால் புற்றீசல்போல ஆங்காங்கே தயாராகும் பாதுகாப்பான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் நிலைமையும் பாராட்டும்படியாக இல்லை. ஓராண்டுக்கு முற்பட்ட புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் ஏறத்தாழ 937 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றில் 153 நிறுவனங்கள்தான் முறையாக அரசின் ஒப்புதல் பெற்றவை.
இந்த நிறுவனங்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்புக்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தரநிர்ணயக் குழுவின் (ஐ.எஸ்.ஐ.) அனுமதி பெற்று பிளாஸ்டிக் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்பவை. அப்படி அனுமதி பெற்று சுத்திகரிப்பதாகக் கூறிக் கொள்ளும் நிறுவனங்களில், 805 நிறுவனங்களின் மாதிரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டபோது அவற்றில் 563 நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பான குடிநீரை வழங்குவதாகத் தெரிந்தது.
மதுரை (34), அம்பத்தூர் (30), சிவகங்கை (20), மறைமலை நகர் (19) ஆகிய இடங்களில் தயாரித்து விநியோகம் செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், "மிகவும் தரமற்றது' என்று பரிசோதனைச்சாலைகளால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, தமிழகத்தில் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களில் 30% நிறுவனங்களின் தண்ணீர் பாதுகாப்பற்றது.
சென்னை மாநகரில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரில் 80% பிளாஸ்டிக் கேன்களில் வழங்கப்படுபவை. சென்னைக்கும் சுற்றுப்புறத்துக்கும் மட்டுமே நாள்தோறும் 2 கோடி லிட்டர் தண்ணீர் தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 400-க்கும் அதிகமான நிறுவனங்கள் குடிதண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.
இந்தக் குடிநீர் வியாபாரிகளால் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுக்கப்படுகிறது. நல்லவேளை, சென்னை கடற்கரை நகரமாக இருப்பதால் தண்ணீரில் உப்பு கலந்தாலும்கூட நிலத்தடி நீரின் அளவு குறையாமல் இருக்கிறது. அதுவல்ல பிரச்னை. முறையான சுத்திகரிப்பு செய்யப்படாமலும், நச்சு நுண்ணுயிரிகள் அகற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தாமலும், அவரவர் இஷ்டத்திற்குத் தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வது என்பது மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துவிடக் கூடும் என்பதுதான் கவலைப்பட வேண்டியது.
சுத்தமான குடிநீர் வழங்குவது அரசின் கடமை. அதைச் செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் குடிநீர் சுத்தமானதாக இருப்பதையாவது அரசு உறுதி செய்ய வேண்டும். விலை கொடுத்து வியாதியை வாங்கும் அவலத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுவிடாமல் தடுக்க வேண்டியது அரசின் உடனடிக் கடமை.

No comments:

Post a Comment