Dec 2, 2014

குடிநீர் சுகாதாரமாக உள்ளதா?

பரமக்குடி, டிச. 2:
பரமக்குடி நகரில் கடைகளில் விற்கப்படும் குடிநீர் சுகாதாரமாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தடுக்க அரசு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது தேவைக்காக மினரல் வாட்டர், பாக்கெட் குடிநீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டில்கள், கேன்கள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் குடிநீர் ஐஎஸ்ஐ முத்திரையுடன் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பரமக்குடி நகர் பகுதியில் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பிட்ட சில கடைகளில் விற்கப்படும் பாக்கெட் குடிநீரில், பிளாஸ்டிக் வாசம் அடிக்கிறது. கேன்களில் விற்கப்படும் குடிநீரில், ரசாயன வாசம் அடிக்கிறது. ஏற்கனவே இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பல கடைகளில் சுகாதாரமில்லாமல், ஐஎஸ்ஓ முத்திரை இல்லாத தண்ணீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்றது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தற்போது மீண்டும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பரமக்குடியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், `பரமக்குடியில் குறிப்பிட்ட சில கடைகளில் விற்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புதிய பெயரில் தரம் இல்லாத கம்பெனிகள் குடிநீரை விநியோகம் செய்கின்றன. சில தண்ணீர் பாக்கெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை இருந்தும் தண்ணீரில் தரமில்லை. குடிநீரில் துர்நாற்றம், பிளாஸ்டிக் வாசம் அடிக்கிறது. இத்தொழிலில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளதா என தெரியவில்லை’ என்று கூறினார்.
விரைவில் அதிரடி ஆய்வு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `கடைகளில் டீத்தூள், பருப்பு, மசாலா என அனைத்திலும் கலப்பட பொருட்கள் சேர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. கடைகளில் விற்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். இதில் பிடிபடும் கடைக்காரர்களிடம் தயவு காட்டுவது கிடையாது. விரைவில் மீண்டும் அதிரடி ஆய்வு நடத்த உள்ளோம்’ என்றனர்.

No comments:

Post a Comment