Dec 1, 2014

தனியார் பள்ளி, கல்லுரி விடுதிகளில் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க கூடாது உணவு பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தல்

நாமக்கல், நவ. 30:
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்க கூடாது என உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர் வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், பள்ளி மற்றும் கல்லூரி உணவு விடுதிகளில் கலெக்டர் உத்தரவுபடி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, முத்துசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
விடுதி சமையலறை மற்றும் உணவுப்பொருள் சேமிப்பு அறைகளில் உள்ள பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. சமையலர்கள் கையுறைகளை அணிந்து உணவு தயாரிக்க வேண்டும், சமையலறையின் உள்ளே வேலை செய்யும் ஆட்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் தலைகவசம், கையுறைகளை அணிய வேண்டும் என ஆய்வின்போது, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
3 நேரமும் உணவுமாதிரி 500 கிராம் வீதம் எடுத்து வைக்க வேண்டும். உணவு தயாரித்த பின்னர், காப்பாளர் அல்லது மேலாளர் சாப்பிட்டு பார்த்து அதை பதிவேட்டில் பதிவு செய்து, அரை மணி நேரம் கழித்து மாணவர்களுக்கு உணவு பரிமாற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
சமையலறை மற்றும் உணவு சேமிப்பு அறையில் ஈ, எலிகள் மற்றும் பூச்சிகள் புகாத வண்ணம் ஜன்னல்களுக்கு மேலே வலை அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.தினமும் மீதமாகும் உணவு கழிவுகளை அப்போதே அப்புறப்படுத்த வேண்டும். இறைச்சி தேவையான அளவே வாங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் சேமிக்கும் தொட்டிகளை 15 நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யவேண்டும். கொள்முதல் செய்யப்படும் மூலப்பொருட்களில் லேபிள் மற்றும் பேக்கிங் தேதி, பேட்ச் நெம்பர், தயாரிப்பாளர் முகவரி, காலக்கெடு, ஆகியவை சரியாக உள்ளதா என பார்த்து வாங்கி சேமிப்பு அறையில் வைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி உணவு விடுதிகளில் ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment