Nov 13, 2014

திருவண்ணாமலையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை ஆர்டிஓ தலைமையில் அதிரடி ஆய்வு


திருவண்ணாமலை, நவ. 13:
திருவண்ணாமலையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை குறித்து ஆர்டிஓ தலைமையில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலையில் காலவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனாலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் நடத்துவதில்லை. உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் நடத்தப்படும் திடீர் ஆய்வுகளும் கண்துடைப்பாகவே நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனையை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆர்டிஓ உமாமகேஸ்வரி தலைமையில், நகராட்சி ஆணையர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட், டவுன் டிஎஸ்பி சரவணகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ், நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கலேஷ்குமார், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று திருவண்ணாமலையில் திடீர் ஆய்வு நடத்தினர்.
தேரடி வீதி, சின்னக்கடை தெரு, பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில், சுமார் 165 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல், தயாரிப்பு தேதி மற்றும் காலவாதி தேதி குறிப்பிடாத பேக்கிங் உணவு பொருட்கள், காலவதியான குளிர்பானங்கள், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தொழிலாளர் துறை மூலம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தீபத்திருவிழா முடியும் வரை தினசரி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரம் முழுவதும் உள்ள கடை மற்றும் உணவகங்களில் காலாவதியான உணவு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆர்டிஓ உமாமகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

No comments:

Post a Comment