Nov 10, 2014

குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கெடு


கடலூர், நவ. 9:
கடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை டிசம்பர் 5ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மட்டுமல்லாமல் டீக்கடைகள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரிகள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இவ்வாறு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகள் துருப்பிடித்து சுகாதார சீர்கேடாக காட்சி அளித்தன. உள்பகுதி துரு பிடித்திருந்ததால் குடிநீரிலும் துரு கலந்து வந்தது. குடிதண்ணீரும் கலங்கலாகவும் வாடையுடனும் விநியோகிக்கப்பட்டது. ஒரு குடம் 5 ரூபாய்க்கு வாங்கிய பொது மக்கள் இதனால் கலக்கம் அடைந்தனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை அதிரடியாக ஆய்வு செய்தார்.
ஆயிரம் லிட்டர் குடிதண்ணீரில் நான்கரை கிராம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்படவேண்டும் என்ற விதிமுறையை எந்த டேங்கர் லாரிகளும் பின்பற்றவில்லை. மேலும் பல டேங்கர் லாரிகள் கழிவுநீர் ஏற்றிச்செல்லும் வண்டிப்போல சுகாதார சீர்கேட்டுடன் காட்சி அளித்தன.
இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையால் குடிநீர் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். வட்டார பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்ரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 5ம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறமும், வெளிப்புறமும் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிதண்ணீருக்கும் நான்கரை கிராம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும். அனைத்து குடிநீர் லாரிகளையும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்நம்பர் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.
இவ்வாறு எல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கு அனைத்து குடிநீர் டேங்கர் லாரி களையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment