Oct 29, 2014

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு



வால்பாறை, அக்.29:
வால்பாறையில் உள்ள பேக்கரி, ஓட்டல் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர்.
கோவை மாவட்ட உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வபாண்டியன், கோவிந்தராஜ், காளிமுத்து ஆகியோர் நேற்று வால்பாறை நகரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வு குறித்து மாவட்ட அலுவலர் கதிவரன் கூறுகையில், வால்பாறையில் காலாவதியான குளிர் பானங்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், ஆய்வு மேற்கொண்டோம்.
அதில் சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழித்துவிட்டோம். இனிமேல் இதுபோன்ற காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
உணவு பொருட்களை வாங்கும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறிப்பாக பொருட்களின் காலாவதி தேதியை கண்காணித்து வாங்கவேண்டும் என்றார். மேலும் அதிகாரிகள் தேயிலைத்தூள் விற்பனை கடைகளில் தேயிலையை நீரில் கலந்து ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment