Oct 20, 2014

பலகாரம் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைப்பு



சேலம், அக்.18:
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் ஸ்வீட் ஸ்டால் மற்றும் திருமண மண்டபங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக ஸ்வீட் கடைகள் மட்டுமின்றி திருமண மண்டபம், வீடுகளிலும் பலகாரங்கள் தயாரித்து விற்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுகிறதா என்றும், அவற்றில் கலப்படம் செய்யப்படுகிறததா? என்பது குறித்தும் கடந்த சில நாட்களாக ஸ்வீட் ஸ்டால், திருமண மண்டபங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி மண்டபங்களில் இனிப்பு, காரம் வகைகள் தயாரிப்பவர்கள் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கவேண்டும். பதிவு செய்யாமல் பண்டிகை கால இனிப்பு, கார வகைகள் தயாரிக்கக்கூடாது.
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் தரமானதாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 4 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் பலகாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வார்கள். அதன்பின், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.
பலகார தயாரிப்பாளர்களிடம் பேக்கிங்கில் பலகாரம் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது குறித்து அவசியம் குறிப்பிட என்றும், எத்தனை நாட்களுக்குள் அதை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டு இருக்கவேண்டும் என்று கூறியுள்ளோம். அவர்களும் தாங்கள் எந்த தேதியில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்து பேக்கிங்கில் அவசியம் குறிப்பிடுவதாக கூறியுள்ளனர்.
பொதுவாக பாலில் தயாரிக்கப்படும் பொருட்கள் 3 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும். சாதாரண ஸ்வீட் வகைகள் 7 முதல் 15 நாட்கள் வரையும், கார வகைகள் 20 முதல் 25 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் இனிப்பு, கார வகைகளை வாங்கும்போது, அவை எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்று கேட்டு வாங்கவேண்டும். அதில் தயாரிக்கப்பட்ட தேதி உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அனுராதா கூறினார்.

No comments:

Post a Comment