Sep 13, 2014

காலாவதியான 8,000 குளிர்பான பாட்டில் பறிமுதல் செய்து அழிப்பு

தலைவாசல்: தலைவாசல் பகுதியில், ஹோட்டல், டீக்கடை மற்றும் குடோன்களில், காலாவதியான நிலையில் விற்கப்பட்ட, 8,000 குளிர்பான பாட்டில்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தலைவாசல் பஸ் ஸ்டாண்ட், பட்டுத்துறை, சார்வாய், மும்முடி, ஆறகளூர் கிராமங்களில் உள்ள, ஹோட்டல், டீ, மளிகை, பெட்டிக்கடை மற்றும் கூல்டிரிங்ஸ் ஏஜன்சி குடோன்களில், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பட்டுத்துறை கிராமத்தில், கலைச்செல்வன் ஏஜன்சி குடோனில், காலாவதியான நிலையில், தயாரிப்பு தேதியை மாற்றி விற்பனை செய்வதற்கு அடுக்கி வைத்திருந்த, 4,500 கூல்டிரிங்ஸ் பாட்டில்களை, பறிமுதல் செய்தனர்.
அதேபோல், காட்டுக்கோட்டை ரகுநாதன் கூல்டிரிங்ஸ், அண்ணாமலை, முத்தையா ஏஜன்சி, மும்முடி கனிஷ்கா ஹோட்டல், தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல், டீ கடைகளில், 3,500 கூல்டிரிங்ஸ் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட, 8,000 கூல்டிரிங்ஸ் பாட்டில்களை, சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்று, அழித்தனர். தொடர்ந்து, தலைவாசல், மும்முடி பகுதியில் உள்ள, ஹோட்டல்களில், பால் பாக்கெட், தயிர், பாதாம் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து, அழித்தனர்.காலாவதியான கூல்டிரிங்ஸ் விற்பனை செய்த ஐந்து பேருக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், "நோட்டீஸ்' வழங்கியதோடு, மறு ஆய்வில், காலாவதி மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துச் சென்றனர்.

No comments:

Post a Comment