Jul 10, 2014

சேலம் அருகே கலப்படம் செய்த ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை



அயோத்தியாப்பட்டணம், ஜூலை.10-
சேலம் அருகே கலப்படம் செய்த ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்பாளையம் பகுதியில் தனியார் ஜவ்வரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில், கலப்படம் செய்து விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார் வந்தது.
அதன்பேரில், நியமன அலுவலர் அனுராதா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த ஆலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஆலையின் உரிமையாளர் அண்ணாதுரையிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள், ஆலைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆலைக்கு ‘சீல்‘
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த கேன்களில் சோடியம் ஹைபோ-குளோரைடு, சல்பியூரிக் அமிலம் போன்றவை இருந்தது. ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதற்காக மரவள்ளிகிழங்கை தோல் உரிக்காமல் அரைத்து வைத்த ஈரமாவு, கல்மாவு(சாக்பீஸ் தயாரிக்கும் மாவு) மற்றும் மக்காச்சோளமாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கலப்படம் செய்து ஜவ்வரிசி உற்பத்தி செய்ததற்காக அந்த ஆலையை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தார். ஜவ்வரிசி ஆலைக்குள் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அமிலம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஆய்வுக்காக ஆலையில் இருந்து மாதிரிகளை அதிகாரிகள் எடுத்தனர்.
மாதிரி ஆய்வு
ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே ஆலையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஜவ்வரிசியில் கலப்படம் செய்தது தெரியவந்து. இதையடுத்து ஆலையின் உரிமையாளரிடம் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறியும் இந்த ஆலையில் கலப்படம் செய்யப்பட்டதால் நேற்று ஜவ்வரிசி ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment