Jun 11, 2014

கண்காணிப்பு குழு அமைப்பு: ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம் செய்தால் நடவடிக்கை முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை



கண்காணிப்பு குழு அமைப்பு:
ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம் செய்தால் நடவடிக்கை
முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை
சேலம்,ஜூன்.11-
ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம் செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கை மூலப்பொருளாக கொண்டு ஜவ்வரிசி(சேகோ) தயாரிக்கும் ஆலைகள் சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பபடுகிறது. இந்த நிலையில் ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
கலப்படத்தை தடுக்க அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கவும், கலப்படம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நேற்று மாலை நடந்தது.
விவசாயிகளுக்கு பாதிப்பு
இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், மரவள்ளி கிழங்கை மூலப்பொருளாக கொண்டு ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மரவள்ளி கிழங்கோடு மக்காச்சோளத்தை சேர்த்து ஜவ்வரிசி தயாரிக்கும் முறை பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. இதனால் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். நுகர்வோருக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் தரப்பில் பேசுகையில், ஜவ்வரிசி தயாரிப்பில் மரவள்ளி கிழங்கே முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மூலப்பொருட்களை அதிக நாட்கள் இருப்பில் வைக்கும்போது ஏற்படும் ஒருவித புளிப்புதன்மையை போக்க வேண்டிய தேவை உள்ளது. உற்பத்தியாளர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு நடத்தி தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது:-
கண்காணிப்பு குழு
ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படத்தை தடுக்க அரசு உத்தரவுப்படி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் ஆய்வாளர்கள், வணிக வரித்துறையினர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சேகோ சர்வ் அதிகாரிகள் மற்றும் உதவி கலெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில் திடீர் ஆய்வு நடத்துவார்கள். ஆய்வின்போது விதிமுறைகளை மீறி கலப்படம் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க நூற்றுகணக்கானோர் கூட்டம் நடந்த அரங்கிற்கு வந்து காத்திருந்தனர். கூட்டம் தொடங்க காலதாமதம் ஏற்பட்டதால் அவர்களில் சிலர் கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர். அங்கிருந்த அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் சாந்தா, வணிகவரித்துறை இணை ஆணையர் தம்பித்துரை, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment