Jun 10, 2014

காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி தடைநீக்க ஆய்வகம் :வேளாண் துறை நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், மாம்பழங்கள், காய்கறிகளுக்கு வெளிநாடுகள் தடை விதித்துள்ளன. இப்பிரச்னை தீர, பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் விளையும் மாவட்டங்களில், ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும், 'அல்போன்சா' ரக மாம்பழங்கள்; கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும், கத்தரிக்காய், பஜ்ஜி மிளகாய், குடைமிளகாய், புடலங்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் மூலம், விவசாய கடன்களை பெற்று, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். பசுமை குடில்கள் இதற்காக, பல லட்சம் ரூபாய் செலவில், பசுமை குடில்களை அமைத்துள்ளனர். இதற்கு, 50 சதவீதம் மானியம் கிடைத்தாலும், மீதமுள்ள தொகைக்கு, கைக்காசை தான் செலவழிக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின், 'அல்போன்சா' ரக மாம்பழங்களுக்கு கடந்த, ஏப்ரலில், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதன் தொடர்ச்சியாக, பச்சை மிளகாய், காய்கறிகளுக்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இவற்றில், ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் தடை செய்ததாக, அந்நாடுகள் அறிவித்துள்ளன. இந்த ஆண்டு, தமிழகத்தில், மாம்பழங்கள் உற்பத்தி குறைவு என்பதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படவில்லை. ஆனால், பசுமை குடில்கள் மூலம், காய்கறிகளை பயிரிட்டு ஏற்றுமதி முயற்சியில் இறங்கிய விவசாயிகளுக்கு, வருவாய் இழப்பு மட்டுமின்றி நஷ்டம் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதனால், வங்கி கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். வழக்கமாக, சென்னை மற்றும் பெங்களூரு வழியாக, வெளிநாடுகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காய்கறிகள் உற்பத்தி செலவு வெளிநாடுகளுக்கு சென்ற பின், அங்குள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகளை அவசர அவசரமாக, தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். ஏற்றுக் கொள்ளும் தரத்திற்கு இல்லை எனக் கூறி, அவற்றை குப்பையில் வீசுகின்றனர். இதுகுறித்த படங்கள், இ - மெயில் மூலம், விவசாயிகளுக்கும், கமிஷன் ஏஜன்ட்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செலவு; ஏற்றுமதி செலவை செய்த பின், இது போல் நடப்பதால், விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது.வெளிநாடுகள் விரும்பும் தரத்திற்குட்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை அனுப்ப வேண்டும் என்றால், அவற்றை, ஏற்றுமதி செய்வதற்கு முன், அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்கு, தமிழகத்தில் ஆய்வகங்களை அமைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே, அரசிடம் இத்திட்டம் பரிசீலனையில் இருந்து, திடீரென கைவிடப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, வேளாண் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது:வெளிநாடுகளில், உணவை தரமறிந்து சாப்பிடுகின்றனர். ஆனால், இந்தியாவில், வயிற்றை நிரப்புவதற்காக சாப்பிடுகிறோம். தரத்தைப்பற்றி, நாம் கவலைப்படுவது இல்லை. இங்கு, 'கார்பைடு' மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதற்கு கூட ஆட்கள் இருக்கத் தான் செய்கின்றனர். வெளிநாடுகளில், செயற்கை உரங்களுக்கு, பதில் மண்புழு கழிவு, தென்னைநார் கழிவு, தாவரக்கழிவு, விலங்கின கழிவு, கரும்பு சக்கை, கோழிபண்ணை கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர். அவை நமக்கு அதிகளவில் கிடைத்தாலும், 75 சதவீதம் அளவிற்கு, செயற்கை உரங்களை பயன்படுத்துகிறோம். மகசூல் அதிகம் கிடைக்கும் என்பதால், இதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்களில் தான், ரசாயன கலப்பு அதிகளவில் உள்ளதாக, வெளிநாடுகளில் தடை விதிக்கப்படுகிறது. இனியாவது, விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். வேளாண் துறையும், இதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், காய்கறி ஏற்றுமதிக்கு முன், தரக்கட்டுப்பாடு செய்வது அவசியம். இதற்காக, காய்கறிகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் மாவட்டங்களில், ஆய்வகங்களை அரசு அமைக்கவேண்டும்.இதன்மூலம், விவசாயிகளுக்கு ஏற்படும், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment