May 7, 2014

செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

நாமக்கல், மே 7: 
மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
நாமக்கல் மாவட்டத்தில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமனஅலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குமாரபாளையம் நகரப்பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். அப்போது முதல் முறை என்பதால் வியாபாரிகளை எச்சரிக்கை செய்துவிட்டனர். 
இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நன்கு முதிர்ச்சியடைந்த மாம்பழங்கள் இயற்கையாகவே 5 முதல் 6 நாட்களுக்குள் பழுக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதற்கு முன்பே பழுக்க வைக்க பல்வேறு முறைகளை கையாண்டு பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்கள். செயற்கை முறையில் கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால், நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு இயல்பை விட குறைவாகிறது. வாந்தி,பேதி மற்றும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால், அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும். 
தொடர்ந்து இச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். 

No comments:

Post a Comment