May 27, 2014

ராஜபாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் விற்பனை அமோகம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



தளவாய்புரம், மே 27: 
ராஜபாளையம் மற்றும் சுற்று பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழக அரசு புகையிலை மற்றும் போதை பாக்கு விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. தடையை தொடர்ந்து ஒரு சில நாட்கள் மட்டும் அதிகாரிகள் சோதனை செய்து ஆங்காங்கே பல லட்சம் மதிப்புள்ள புகையிலை மற்றும் போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர். ஆனால் ராஜபாளையத்தில் பெயரளவிற்கு ஒன்றிரண்டு கடைகளில் மட்டுமே பறிமுதல் செய்தனர். 
பறிமுதல் தொடர்கிறது என்று தெரிந்ததும் வியாபாரிகள் புகையிலை மற்றும் போதை பாக்குகளை கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டு தங்களிடமிருந்த புகையிலை மற்றும் போதை பாக்குகளை பதுக்கி வைத்தனர். அதிகாரிகள் பறிமுதல் செய்வதை நிறுத்தியதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பாக்கு மற்றும் புகையி லை யை தடை என்ற பெயரை சொல்லி பல மடங்கு விலை உயர்த்தி அதாவது 5 ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருட்களை 10 முதல் 15 வரை விற்பனை செய்தனர். 
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்றால் கைது சிறை என்று போலீசார் நடவடிக்கை எடுப்பதை போல தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தடை விதித்தபோது மட்டும் அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதன்பிறகு சோதனை நடத்துவதை விட்டு விட்டனர். இதனால் தற்போது கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 
இளைஞர்களை சீரழிக்கும் பாக்குகளுக்கு அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் புகையிலையை வேறு எங்கும் கிடைக்காது என்று கூறி கடைக்காரர்கள் பல மடங்கு விலை வைத்து விற்கிறார்கள். இதனால் அதிகாரிகள் திடீரென கடைகளில் சோதனை நடத்தி புகையிலை மற்றும் போதை பாக்குகளை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் அதனை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.    

No comments:

Post a Comment