Apr 1, 2014

உணவுப்பொருள் விற்பனையில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

நாகப்பட்டினம், ஏப்.1-உணவுப்பொருள் விற்பனையில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். விழிப்புணர்வு கூட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு கலெக்டர் உத்தரவுப்படி, நாகூரில் உணவு விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமாக இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தரமான மூலப்பொருட்கள்நாகூர் கந்தூரி விழாவுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான பாதுகாப்பான உணவு வழங்க உணவு விற்பனையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஓட்டல்கள், தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனையாளர்களும் விற்பனை நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும். உணவு கையாள்பவர்கள் தன் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்க வேண்டும். கடும் நடவடிக்கைபொதுமக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் டீ பார்சல் வழங்கக் கூடாது. காலாவதியான, தயாரிப்பு விவரமில்லாத உணவு பொருட்களையும் விற்பனை செய்யக் கூடாது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றபின்னரே அன்னதானம் வழங்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை மீறி உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விழா காலங்களில் உணவு விற்பனை நிலையங்களை கண்காணிக்க 5 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் டீக்கடை, ஓட்டல், மளிகைக்கடை, மருந்துக்கடை, இறைச்சிக்கடை உள்ளிட்ட அனைத்து வகை உணவு விற்பனையாளர்கள் மற்றும் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் நன்றி கூறினார்.

1 comment:

  1. பாதுகாப்பான உணவு கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியது பாராட்டுக்குரியது. உணவு தயாரிப்பாளர்கள் நல்ல வழிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் .

    ReplyDelete