Apr 4, 2014

பறக்கும் படை சோதனையில் 800 கிலோ குட்கா, 500 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

சென்னை, ஏப். 3: 
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 800 கிலோ குட்கா, 500 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. 
சவுகார்பேட்டை, வரதப்ப முதலி தெருவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடந்த 30ம் தேதி, அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ஆறுமுகம் என்பவரின் குடோனில், பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நேற்று முன்தினம், பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி தேவன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 500 கிலோ கலப்பட டீத்தூள் இருப்பது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதேபோல், எம்.கே.பி நகர் மத்திய நிழற்சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், 100 கிலோ மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கலப்பட டீத்தூளை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குழி தோண்டி அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment