Mar 17, 2014

செயற்கை வண்ணம் கூட்டப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஏற்படும் கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்


சேலம், மார்ச் 16: 
செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகளால் உணவுக்குழல் புற்று நோய் ஏற்படும் என நுகர்வோர் உரிமைகள் விழாவில் உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறினார். 
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டி சார்பில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. அமைப்பின் தலைவர் செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தொழிற்பயிற்சி நிலையத்தில் துணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் சுப்ரமணி, நுகர்வோர் அமைப்பின் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் விஜயமுருகன் வரவேற்றார். 
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அருணாச்சலம் கருத்தரங்கை துவக்கி வைத்து போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் வெங்கடேசன் எடை அளவு மோசடி குறித்துப் பேசினார். டீத்தூள், பருப்பு, மிளகாய்ப்பொடி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை கண்டறிவது குறித்து மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் அனுராதா செயல் விளக்கம் அளித்தார். மேலும் இவர் பேசியதாவது: 
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டீத்தூள், மிளகாய்ப்பொடி மற்றும் பருப்பு வகைகளிலும் செயற்கையாக நிறம் ஏற்றப்படுகிறது. பல்வேறு பொருட்களில் எடையைக் கூட்ட கலப்படம் செய்யப்படுகிறது. இனிப்பு வகைகள், சிப்ஸ், சில்லி சிக்கன், சில்லி காலிபிளவர் போன்ற உணவுகளில் மக்களைக் கவர்வதற்காக செயற்கை வண்ணம் சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற உணவுகளைப் பயன்படுத்தி வந்தால் உணவுக்குழல் புற்று நோய் உருவாக வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு கலப்படப் பொருட்களை தொடர்ச்சியாக உட்கொள்வதும் உடல் நலத்துக்கு எதிரானது. 
பொருள் வாங்கும் பொது அதனைப் பற்றிய முழு விவரமும் பேக்கின் மேல் பகுதியில் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். கோடை காலத்தில் பெயர் இல்லாத போலி குளிர்பானங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்பது தெரிந்தாலோ, பொருட்களின் கலப்படம் குறித்தோ 94435 20332 என்ற எனது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அனுராதா பேசினார். 
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment