Dec 6, 2013

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்


புதுடெல்லி, டிச 6: 
பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் பாலில் கலப்படம் அதிகரித்துள்ளது. கலப்பட பால் விற்பனை எங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது. பாலில், செயற்கையாக ரசாயன பொருட்கள், டிடெர்ஜன்ட் பவுடர் போன்றவை கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது என்று அவ்வப்போது சர்வேக்களில் தெரியவந்துள்ளது. இது குறித்து பல நுகர்வோர் அமைப்பினரும், நிபுணர்களும் கவலை தெரிவித்து வந்தனர். 
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர். 
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: 
பாலில் கலப்படம் செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம். உச்சக்கட்ட குற்றமாக கருதப்பட வேண்டும். அதற்கு ஆயுள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டங்களை திருத்த வேண்டும். மாநில அரசுகளிடம் இது தொடர்பான சட்டம் உள்ளதால், அவர்கள் இந்த சட்டத்தில் கடுமையான திருத்தம் கொண்டு வர வேண்டும். 
குழந்தைகள் உட்பட பலரும் அருந்தும் பாலில் கலப்படம் செய்வதை சகிக்க முடியாது. அதிலும், பிளாஸ்டிக் போன்ற ரசாயன கலவை சேர்ப்பது, நுரை வருவதற்காக சோப்பு டிடெர்ஜன்ட் பவுடரை கலப்பது போன்றவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறையினர் முழு கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது. 
உணவுப்பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு சட்டத்தின் படி, பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆறு மாதம் வரை தான் தண்டனை தர முடியும். இது போதாது. மனித சமுதாயத்தை பாதிக்கும் பால் கலப்படக்காரர்களுக்கு இந்த தண்டனை போதாது. அதனால் சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு, கலப்படம் செய்த பாலை விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். 
அரசு சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு 
உணவுப்பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு சட்டத்தின் படி, பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆறு மாதம் வரை தான் தண்டனை தர முடியும். இது போதாது. மனித சமுதாயத்தை பாதிக்கும் பால் கலப்படக்காரர்களுக்கு இந்த தண்டனை போதாது. அதனால் சட்டத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு, கலப்படம் செய்த பாலை விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். 
கடந்த 2011 ம் ஆண்டில், பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பல மாநிலங்களிலும் பாலில் கலப்படம் செய்வது பரவி உள்ளது என்ற தகவல் அதில் இருந்து தெரியவந்துள்ளது. பொதுநல மனுவை தாக்கல் செய்தவர்கள் அளித்த ஆதாரங்களில் இருந்து இது தெரியவந்துள்ளது. இது மிகவும் வேதனையானது.  இவ்வாறு நீதிபதிகள் கூறினர். 
ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா உட்பட பல மாநிலங்களிலும் பாலில் கலப்படம் நடப்பது பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொறுப்பில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் சமீபத்தில் பல மாநிலங்களில் ஆய்வு நடத்தியது. அதில் பல இடங்களிலும் பாலில் கலப்படம் செய்வது தெரியவந்துள்ளது. 
சமீபத்தில், மும்பை, புனே போன்ற இடங்களில் பாலில் கலப்படம் செய்ததாக அதிரடி ரெய்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி மோசடி செய்யும் அளவுக்கு இதில் மாபியா கும்பல் இருப்பது தெரியவந்தது. பல தனியார் அமைப்புகளும் இது தொடர்பாக தகவல்களை சேகரித்துள்ளன. அவற்றின் தொகுப்பு தான் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக தாக்கல் ஆகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment