Dec 20, 2013

சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் இடமாற்றம் அ.தி.மு.க., பிரமுகர் ஆலையில் ஆய்வு நடத்தியதால் பலிகடா

சேலம்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, நாமக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க., பிரமுகர் சேகோ ஆலையில் ஆய்வு மேற்கொண்டதால், அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மாவட்டத்தில் உள்ள கலப்பட பொருட்கள், போதைப் பொருட்கள், காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். ஆத்தூரில், அ.தி.மு.க., பிரமுகர் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட ஆலைகளில், ஜவ்வரிசியை அவர் ஆய்வு செய்தார். இதற்கு, சதாசிவம் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
உள்ளூர் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க., உயர்மட்ட நிர்வாகிகள் ஆதரவில் உள்ள சதாசிவம், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவை, அநாகரீகமான வார்த்தைகளில் பேசி மிரட்டினார். அதைத்தொடர்ந்து, ஆத்தூர் போலீஸில் அனுராதா புகார் அளித்தார். ஜாமீன் பெறுவதற்காக சதாசிவம் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரை இடமாற்றம் செய்ய அமைச்சர் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நேற்றைய, "காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.
சென்னையில் இன்று நடக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு கூட்டத்துக்கு அனுராதா சென்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு வந்துள்ளது. சேலம் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த உத்தரவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன், கூடுதல் பொறுப்பாக, சேலம் மாவட்டத்தையும் கவனிப்பார் என தகவல் வந்துள்ளது. தவறு செய்த, அ.தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காமல், நேர்மையாக செயல்பட்ட உணவு அதிகாரி பலிகடா ஆக்கப்பட்டிருப்பது டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இடமாற்றம் தொடர்பாக முதல்வர் வரை, புகார் அனுப்ப உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment