Dec 19, 2013

பெண் அதிகாரியை இடமாற்றம் செய்ய மந்திரி திட்டம்? அ.தி.மு.க., பிரமுகர் ஆலையில் ஆய்வு செய்த "பாவம்'

சேலம்: சேகோ ஆலை ஆய்வுக்கு சென்ற சுகாதாரத்துறை பெண் அதிகாரியிடம், "உன் கணவர், உன் மகள் எங்கு இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியும், ஒழுங்காக அங்கிருந்து கிளம்பிவிடு' என, மொபைலில் மிரட்டிய, அ.தி.மு.க., பிரமுகரை கைது செய்யாமல், போலீஸார் வேடிக்கை பார்க்கின்றனர். அமைச்சர் உதவியுடன், பெண் அதிகாரியை இடமாற்றம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள, அ.தி.மு.க.,வினர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக அனுராதா உள்ளார். ஓராண்டுக்கும் மேலாக இப்பணியில் உள்ள அவர், அனுமதியின்றி இயங்கும் கடைகள், சுகாதாரமற்ற வகையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
குடிநீர், போதை வஸ்துகள், இனிப்பு வகை, உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பல நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேகோ ஆலைகள் அதிகம் உள்ள பகுதியாக, ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் மட்டும், 200க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும், ஜவ்வரிசி வெளிமாநிலங்களுக்கு உணவுப் பொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிர்நிறமாக கொண்டு வர, ஜவ்வரிசியுடன், அதிக விஷத்தன்மை கொண்ட ஒயிட்னரை கலக்கின்றனர். அவற்றை உட்கொள்ளும்போது, உடலில் பல்வேறு பாதிப்பு ஏற்படும்.
சில வாரங்களுக்கு முன், ஆத்தூர் பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சேகோ ஆலைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா ஆய்வு மேற்கொண்டார்.
ஃபோனில் மிரட்டல்
ஆத்தூர் பைத்தூர் ரோட்டில் உள்ள, அ.தி.மு.க., பிரமுகர் சதாசிவத்துக்கு சொந்தமான சேகோ ஆலையில் ஆய்வு மேற்கொண்டபோது, மொபைலில் பேசிய சதாசிவம், "நான், ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தில் மந்திரியுடன் இருக்கிறேன். நீ, எங்கு போனாய், எங்கு வந்தாய் என்பது எனக்கு தெரியும். மற்ற ஆலைகளை விட்டு, என் ஆலையை மட்டும் ஏன் ஆய்வு செய்கிறாய், ஒழுங்காக அங்கிருந்து கிளம்பிவிடு. உன் கணவர், உன் மகள், எங்கு இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியும். ஈரோடு, நாமக்கல்லில் உள்ள அதிகாரிகள்...(மோசமான வார்த்தை உபயோகம்) வேலை பார்க்கின்றனர். உனக்கு மட்டும் ஏன் இந்த வேலை, தேர்தல் முடியட்டும் உன்னை என்ன செய்கிறேன் பார்' என, மிரட்டி உள்ளார்.
அதையடுத்து, ஜவ்வரிசியை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அனுராதா, கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத்தை, சம்பவ இடத்துக்கு வரவழைத்து வீடியோ மூலம் ஆய்வுக்குரிய பொருளை எடுத்தார். மூன்று நாட்களுக்கு பின், ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் அனுராதா புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், சதாசிவம் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து, ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்று வருகிறார். ஆனால், அவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்க்கின்றனர்.
தே.மு.தி.க.,வில் இருந்து தாவிய சதாசிவம், பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் ஆதரவுடன், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, இளங்கோவன் ஆகியோர், சதாசிவத்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இடம்மாற்ற முயற்சி
இந்நிலையில், அனுராதாவை, கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய, அமைச்சர் மூலம் கவனிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில், தி.மு.க.,வினரை மிஞ்சும் வகையில், அ.தி.மு.க.,வினர் ரவுடியிசம் செய்து வருவதை, முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அரசுத்துறையில் உள்ள அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என, எதிர்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், உள்ளூர், அ.தி.மு.க., அமைச்சர் மற்றும் ஆதரவாளர்களின் நடவடிக்கை கண்டு பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். சேலம் உள்ளூர் அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜவ்வரிசியில் விஷத்தன்மை
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
அ.தி.மு.க., பிரமுகர் சதாசிவம் மிரட்டியது உண்மை தான். அதுமட்டுமின்றி, அநாகரீக வார்த்தைகளில் திட்டினார். ஆத்தூர் போலீஸில் புகார் அளித்தேன். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. நாங்கள், அவருடைய சேகோ ஆலையில், ஆய்வுக்கு எடுத்த ஜவ்வரிசியில், விஷத்தன்மை கொண்ட ஒயிட்னர் மிக்ஸிங் இருப்பது தெரியவந்தது. தற்போது, என்னை இடமாற்றம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். என்னுடைய வேலையை நான் செய்கிறேன். கலெக்டர், எஸ்.பி.,யிடம், அப்போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளேன். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment: