Dec 29, 2013

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் பான்பராக் பறிமுதல்


ஆவடி, டிச. 29 : 
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஹன்ஸ் மற்றும் பான்பராக் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். 
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் காமராஜர் நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருள்களான ஹன்ஸ், பான்பராக் ஆகியவை பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செந்தில் முருகனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனை அடுத்து அவரது தலைமையில் அம்பத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வெங்கடேசன், கார்மேகம், ஜெயசந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹன்ஸ், பான்பராக் மூட்டை மூட்டையாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1.2 டன் எடையுள்ள அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அத்திப்பட்டு குப்பைக்கிடங்குக்கு எடுத்து சென்றனர். அங்கு தீவைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். 
உரிமையாளர் சரவணனுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment