Nov 11, 2013

சோதிக்கப்படாத உணவுகள்



நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் நம்மை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. 
உடலுக்கு குளிர்ச்சி தரும் என்று நம்பி நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணையில் பெட்ரோலிய பொருள்களின் கழிவு ரசாயனமான லிக்யூட் பாரபின் என்ற அமெரிக்க மண்ணெண்ணைய் கலந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. 
இது தேங்காய் எண்ணையில் மட்டுமல்லாது எல்லா எண்ணைய்களிலும் கலக்கப்படுவது அம்பலமாகி வருகிறது. 
நாம் தினமும் பல் துலக்கப் பயன்படுத்தும் வித விதமான பேஸ்ட்டுகளில் சிகரெட்டில் இருக்கும் ரசாயனமான நிகோடின் இருப்பதை "டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்சஸ் அன்ட் ரிசர்ச்' (டிப்ஸர்) என்ற நிறுவனம் 2011 இல் வெளியிட்டுள்ளது. ஒரு முறை பல் விளக்கினால் மூன்று சிகரெட் குடிப்பதற்குச் சமம் என்ற அளவில் சில முன்னணி நிறுவனங்களின் பேஸ்ட்டுகளில் நிகோடின் அளவு உள்ளது. 
பேக்கரிகளிலும், நம் வீடுகளிலும் முக்கிய உணவாகப் பயன்படும் மைதா மாவில் இன்சுலின் உற்பத்தியைத் தடுக்கும், கணைய செல்களை அழிக்கும் அலோக்ஸான் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவது வெளிப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் உதாரணங்கள்தான். இந்தப் பட்டியலை நாம் நீட்டித்தால் எந்த உணவையுமே சாப்பிட முடியாத அளவிற்கு பயந்து போவோம். 
நம் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களுக்கு கட்டுப்பாடு ஏதாவது உண்டா அப்படி அனுமதி பெற்று கலக்கப்படும் ரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டவைதானா ப்ரிசெர்வேடிவ் என்னும் இருப்பு ரசாயனங்கள், நியூட்ரிலைசர் என்னும் சமன் படுத்திகள், செயற்கை மணம் ஊட்டும் ரசாயனங்கள், செயற்கைச் சுவை கூட்டும் ரசாயனங்கள், நிறம் மாற்றிகள். . இப்படி எண்ணற்ற ரசாயனங்கள் நம் உணவுத் தயாரிப்பில் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ரசாயனங்கள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. 
ஒன்று அல்லது பல ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் பல அடுக்கு சோதனைகளைக் கடந்து வருகின்றன. மருந்துத்தன்மையுள்ள பொருளை முதலில் கண்டுபிடித்து, அதன் வேதியியல் கலவையைப் பிரித்தெடுப்பார்கள். மருத்துவ குணமுள்ள வேதிப்பொருளை மட்டும் அடையாளம் கண்டு, அதன் தன்மை குறித்த ஆய்வுகள் துவங்குகின்றன. 
இப்படி பிரித்தெடுக்கப்பட்ட வேதிப்பொருளை நச்சுத் தன்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். இதில் மூன்று கட்டங்கள். முதலில் ஆய்வுக்கூடத்தில் எலிகளுக்கு வாய் வழியாக வேதிப் பொருள் கொடுக்கப்பட்டு நான்கு மணி நேர பரிசோதனை செய்யப்படுகிறது. இது உடனடி பரிசோதனை. அப்புறம், 28 நாள்கள் வேதிப்பொருள் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு செய்யப்படும் குறுகிய காலப் பரிசோதனை. மூன்றாவது கட்டமாக, மூன்று மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எலிகளுக்கு மருந்து கொடுக்கப் பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. எலிகள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு அளவுகளில் வேதிப்பொருள் கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எலிகளின் உள்ளுறுப்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த விலங்கு வழி ஆய்வுகள் வழியாக வேதிப்பொருளின் அளவை நிர்ணயிக்கிறார்கள். எந்த அளவு வேதிப்பொருள் விலங்குகளால் பாதிப்பின்றி செரிக்க முடியும் என்பது கண்டறியப்பட்டு, இறுதியில் மனித வழி ஆய்வுகள் துவங்குகின்றன. மேற்கண்ட வழிகளில் விலங்கு வழி ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஒரு வேதிப்பொருளுக்கு சுமார் 920 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 
முதல் கட்ட மனித வழி ஆய்வில் குறைந்த அளவு வேதிப்பொருளை 20 முதல் நூறு மனிதர்களிடம் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. ஒன்பது மாதங்கள் இந்த ஆய்வு தொடர்கிறது. இரண்டாம் கட்டத்தில் 100 முதல் 500 நோயாளிகளுக்கு வேதிப்பொருள் கொடுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள்வரை மருந்தின் இரண்டாம் கட்ட ஆய்வுகள் தொடரும். அப்புறம், நான்கு ஆண்டுகளில் 500 முதல் 5000 வரை நோயாளிகள் பயன்படுத்தப்பட்டு வேதிப்பொருளின் செயல் தன்மை கண்டறியப்படுகிறது. எந்த நிறுவனம் இந்த ஆய்வுகளை மேற்கொண்டதோ அந்நிறுவனத்தின் பெயரில் மருந்துக்கான உரிமை கிடைக்கிறது. 
இப்படி சந்தைக்கு வரும் மருந்துகள் மருத்துவர்கள் வழியாக நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுவது நான்காவது கட்ட ஆய்வு. ஒரு மூலப்பொருளில் இருந்து மருந்தாக மாறி, சந்தைக்கு வருவதற்கு எட்டு ஆண்டுகளில் இருந்து பதினாறு ஆண்டுகள் வரை ஆகும். பல ஆயிரம் கோடிகள் செலவில் ஒரு மருந்து உருவாகிறது. விலங்கு நன்னடத்தைக் குழு, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சந்தைப் படுத்தும் நாடுகளின் துறைகள், ஆணையங்கள் போன்ற அமைப்புகளில் ஒவ்வொரு ஆய்வுக்கட்டத்திலும் அனுமதி பெற வேண்டும். 
இவ்வளவு பெரிய பொருட்செலவையும், பல்வேறு கட்ட ஆய்வுகளையும், நூற்றுக்கணக்கான விலங்குகள், மனிதர்களின் உயிர்ப் பலியையும் கடந்து சந்தைக்கு வருகிற மருந்து அதன் பின்னும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. பக்க விளைவுகள் மனித உயிர்களைப் பாதிக்கும்போது மருந்துகளை தடை செய்வதும் நடக்கிறது. 
இந்த வகைப் பரிசோதனைகள் ஏதாவது உணவிற்கு உண்டா அது உணவு என்ற தலைப்பில் வருவதாலேயே அதில் கலக்கப்படும் வேதிப்பொருட்களைப் பற்றி கேள்விகள் எழுவதில்லை. ஒரு வேதிப்பொருளை மருந்து என்ற பெயரில் விற்க வேண்டுமானால் 8 முதல் 16 ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், உணவு என்றால் ஒரு வாரத்தில் சந்தைப்படுத்தி விட முடியும். 
உணவுகளில் என்ன இருக்கிறது என்பது போன்ற ஆய்வுகளைக் கடந்து, அதன் தன்மை குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். டப்பாவில் அடைத்து விற்கப்படும் எல்லா உணவுகளும் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின்புதான் கடைகளுக்கு வர வேண்டும். வேதிப்பொருட்களால் தயாரான மருந்துகளை எவ்விதம் பயன்பாட்டுப் பரிசோதனைகளை உட்படுத்துகிறோமோ அதே அளவிற்கு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும் உணவுகளும் பரிசோதிக்கப்பட வேண்டும். இப்படியான நடைமுறைகளை ஏற்படுத்தினால், உணவே மருந்து என்று சொன்ன நம் முன்னோர்களின் வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் மருந்தற்ற உணவு என்ற எளிய இலக்கைச் சென்றடைய முடியும்.

No comments:

Post a Comment