Oct 11, 2013

சுகாதாரம் இல்லாத டாஸ்மாக் பார் உணவு பாதுகாப்பு துறை கண்காணிக்குமா?


தர்மபுரி, அக்.11:
தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் பார்களில் சுகாதாரமின்றி இருப்பதாலும், தாபாக்களில் நாய்கள் வளர்ப்பதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 95 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி மது அருந்துவதற்கு என பார் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த பார்களில் மது அருந்த சென்றால், அங்கு மது அருந்த கூடிய டேபிள்கள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே மது அருந்தியவர்கள் சாப்பிட்ட மிச்சங்களை சுத்தப்படுத் தாமலேயே அடுத்தவர் மது அருந்தும் நிலை உள்ளது. அனைத்து மது பான பார்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளே குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. சைடிஷ் உணவு வகைகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது.
மேலும், தர்மபுரி நகரையொட்டிய புறநகரில் உள்ள தாபாக்களில் நாய்கள் வளர்க்கப்படுகிறது. இந்த நாய்கள் மது அருந்துபவரின் முன்பு அமர்ந்து கொண்டு மது அருந்துபவர்கள் சாப்பிட்டு மிச்சமான கறி உணவை சாப்பிட காத்திருக்கின்றன. ஆள் உயர நாய்கள் அருகே மது அருந்துபவர்கள் அச்சத்துடன் மது அருந்துகின்றனர். எனவே நாய்களால் குடிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பேக்கிங் குடிநீரை தவிர பார்களில் வழங்கப்படும் குடிநீரில் புழுக்கள் மிதக்கின்றன. சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்ட உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், அரசு டாஸ்மாக் பார் என்பதால் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். அனைத்து பார்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பேக்கிங் உணவு வகைகளை மட்டுமே பரிமாற அனுமதிக்க வேண்டும். பார் உரிமையாளர்களிடம் சுகாதாரத்தை கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment