Oct 1, 2013

தடையை மீறி குட்கா, ஜர்தா அமோக விற்பனை: நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்



உணவு பாதுகாப்புத் துறையும், பிற துறைகளும் ஒருங்கிணைந்து துரிதமாக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால், தமிழகத்தில் தடையை மீறி, குட்கா, ஜர்தா விற்பனை அமோகமாக நடக்கிறது.
வாயில் வைத்து சுவைக்கும் புகையிலைப் பொருட்களால், புற்றுநோய் பாதிப்பு வருவதைக் கருத்தில் கொண்டு, குட்கா, ஜர்தா வகைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 'தடையை மீறி விற்றால், பொருட்கள் பறிமுதல் செய்வதோடு, 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, அரசு எச்சரித்துள்ளது. தடை விதிக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அரசு உத்தரவு வந்தபோது, ஆர்வம் காட்டிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கடைகளில் ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா, ஜர்தா வகைகளைப் பறிமுதல் செய்தனர். அதை பெரிய அளவிலும் விளம்பரப்படுத்திக் கொண்டனர். பின், இந்த நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத் துறையினர் மறந்து விட்டனர். இதன் காரணமாக, குட்கா, ஜர்தாவின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், 'சுங்கச்சாவடிகளில் சரியான சோதனை இல்லை. இதனால், வட மாநிலங்களிலிருந்து எந்த தடையுமின்றி, குட்கா வகைகள் தடையின்றி வருகின்றன. சென்னையிலிருந்து வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதிகாரிகள், கண்டும், காணாமல் இருந்து வருவதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் தடையின்றி விற்பனை நடந்து வருகிறது' என்றார். உணவு பாதுகாப்புத் துறை மட்டுமே, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்பதால், வருவாய்த் துறை, வணிக வரித் துறை, காவல் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களும் மாதம் தோறும் கூடி, நடவடிக்கைகளை கண்காணிக்கும் என, அறிவிக்கப்பட்டது. கலெக்டர் தலைமையிலான இந்தக் குழுக்களும், இதில் போதிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இந்தக் குழு ஒரு மாதம் கூடியதோடு சரி. அடுத்த கட்ட கூட்டங்களும் நடத்தப்படவில்லை என்றும், விவரம் தெரிந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், போலீசாரும், வியாபாரிகளுக்கு மறைமுக ஆதரவளித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கெனவே, 30 டன் வரை பான், குட்கா, ஜர்தா வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, குப்பையில் புதைக்கப்பட்டன. நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இருந்தபோதிலும், குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை, சத்துணவு தர பரிசோதனை என, கூடுதல் பணிகள் வந்ததால், குட்கா தடுப்பு தொடர்பான கண்காணிப்பு சற்று குறைந்திருக்கலாம். இதிலும், கூடுதல் கவனம் செலுத்தப்படும்' என்றார். மக்களின், சுகாதாரம் கருதியே தடை விதிக்கப்பட்டது. அதே அக்கறையோடு, பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து, தடையை மீறி குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம்.

No comments:

Post a Comment