Sep 30, 2013

நோயால் இறந்த மாட்டிறைச்சி விற்பனை :அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்

பனமரத்துப்பட்டி: நோய் தாக்கி உயிரிழந்த மாட்டின் இறைச்சி, மானா சில்லி, பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விபரீதம் ஏற்படும் முன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், பரவலாக மழை பெய்து வருவதால், பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனிதர்களை போல், மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும், காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பகுதியில், கறவை மாடுகள், கன்றுக் குட்டிகள், ஆடு உள்ளிட்ட கால்நடைகளை, மர்ம காய்ச்சல், சளி மற்றும் கோமாரி நோய் தாக்கி வருகிறது.
நோய் தாக்கிய மாடுகளின் வயிறு, குடல், நாக்கு உள்ளிட்ட இடங்களில் புண்கள் ஏற்பட்டு, வாயில் எந்நேரமும் உமிழ் நீர் கொட்டி வருகிறது. நோய் தாக்கத்தால், உணவு சாப்பிட முடியாமல், எலும்பும், தோலுமாக மாறும் மாடுகள், திடீரென உயிரிழக்கின்றன.
ஆத்துமேடு, நல்லியாம்புதூர், உலகரைமேடு, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில், நோய் தாக்கி, மாடுகள் செத்து மடிந்தன. நோய் தாக்கி இறந்த மாடுகளை, மண்ணில் புதைக்காமல், இலவசமாகவும், குறைந்த விலைக்கும் விற்று வருகின்றனர்.
நோய் தாக்கி இறந்த மாடுகளை, வியாபாரிகள் வாங்கிச் சென்று, சீலநாயக்கன்பட்டி, மல்லூர், சேலம் உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அங்கு, இறைச்சியை தனியாக எடுக்கின்றனர்.
இறைச்சி பாகங்களை, நாள் கணக்கில், ஃப்ரிட்ஜில் வைத்து, விற்பனை செய்கின்றனர். இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, சாலையோரத்தில் உள்ள மானா வறுவல் கடை, சில்லி கடை, பிரியாணி ஸ்டால், டாஸ்மாக் பார் ஆகியவற்றுக்கு விற்கின்றனர்.
மேலும், பல நாட்கள் பயன்படுத்திய தரமற்ற எணணெய் மூலம், காரம் நிறைந்த மசாலா அயிட்டங்களை சேர்த்து, இறைச்சியை வறுத்து, பொறித்து, விற்பனை செய்கின்றனர்.
மது போதையில், நுர்நாற்றம் அடிக்கும் இறைச்சியை, "குடி'மகன்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். நோய் தாக்கி இறந்த இறைச்சியை சாப்பிடுவதால், வயிற்றுப்போக்கு, குடல் புண்கள், கல்லீரல் பாதிப்பு, ஜீரண கோளாறு உள்ளிட்ட நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளன.
எனவே, பனமரத்துப்பட்டி பகுதியில், அசம்பாவிதம் ஏற்படும் முன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து, இறந்த மாடுகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment