Sep 16, 2013

இறைச்சி கடைகளுக்கு "செக்': உணவு பாதுகாப்பு துறை அதிரடி

மேட்டூர்:மாநிலம் முழுவதும், சுகாதாரமின்றி இயங்கும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது; முதல்கட்டமாக, பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு, விதிமுறைஅடங்கிய, "நோட்டீஸ்' கொடுத்து, கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

”காதார கேடு:தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில், ரோட்டோரம் வெட்டவெளியிலும், கூரைகளின் கீழும், ஆடு, கோழி உள்ளிட்ட, இறைச்சி கடைகள் இயங்குகின்றன. பெரும்பாலான கடைகளில், கெட்டுப் போன, அழுகிய, சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கின்றனர்.

இதைத் தடுக்க, இறைச்சி கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை அடங்கிய நோட்டீசை, மாநிலம் முழுவதும் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை வழங்கியுள்ளது.இதுகுறித்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமனஅலுவலர் அனுராதா கூறியதாவது:

ஆடு, கோழி போன்ற இறைச்சியை, உள்ளாட்சி ஆடு வெட்டும் கூடத்தில் வெட்டி, பெட்டியில் அடைத்து, விற்பனை செய்யும் கடைகளுக்கு, கொண்டு செல்லவேண்டும்.கடைகளில் தொங்க விட்டுள்ள இறைச்சி, வெளியில், பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க, கறுப்பு கண்ணாடி பொருத்த வேண்டும்.

வெட்டிய இறைச்சியை, அலுமினியம், மார்பிள், கிரானைட் பதித்த டேபிள் மற்றும் அலமாரியில் மட்டுமே வைக்க வேண்டும். இறைச்சியை, குடிப்பதற்கு உகந்த தண்ணீரில் மட்டுமே, சுத்தம் செய்ய வேண்டும். கடை அருகில் வெட்டுவதற்கான ஆடு, கோழிகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடாது.

சுத்தம் அவசியம்:இறைச்சி கடை கழிவுநீர் வெளியேற, கால்வாய் அமைத்திருக்க வேண்டும். கடையில் துர்நாற்றம்வீசாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.இறைச்சி விற்பனை செய்வதற்கு உணவு பாதுகாப்பு துறையிடமும், கடை வைப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடமும், முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு விதிமுறை அடங்கிய நோட்டீஸ், இறைச்சி கடைகளுக்கு கொடுக்கப்பட்டு, விதிமுறையை பின்பற்ற அவகாசமும் கொடுக்கப்பட்டு உள்ளது.

அவகாசம் முடிந்ததும், விதிமுறைகளை பின்பற்றாத இறைச்சி கடைகள் மீது, உணவு பாதுகாப்பு துறை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அசைவபிரியர்களுக்கு, கடைகளில் சுகாதாரமான ஆடு, கோழி, மீன் இறைச்சி கிடைக்கும்.இவ்வாறு, அவர்கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை "செக்கப்':கடைகளில், இறைச்சி வெட்டும் ஊழியர்களில்பலருக்கு, தோல் நோய், காச நோய் உட்பட, பல்வேறு நோய் இருக்க வாய்ப்புள்ளது. நோயால் பாதித்தஊழியர்கள் வெட்டும் இறைச்சியை சாப்பிடுவோரும், பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இறைச்சி கடைஊழியர்கள், ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவபரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை உணவு பாதுகாப்பு துறைக்கு தர வேண்டும்.

No comments:

Post a Comment