Sep 10, 2013

உணவு பாதுகாப்பு துறை வழக்கு தொடர முடிவு கலப்பட டீத்தூள் சப்ளை

மேட்டூர்: ""கலப்பட டீத்தூள் தயாரிப்பாளர், விற்பனையாளர் உள்பட, மூவர் மீது, உணவு பாதுகாப்பு துறை சார்பில், வழக்கு தொடரப்படும்,'' என்று சேலம் மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
சேலம், ஓமலூர், அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர், மனைவி பாக்கியலட்சுமி பெயரில் டீலர் எடுத்து ஓமலூர், மேச்சேரி, சேலம் புறநகர் பகுதிகளில் கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு, டீத்தூள் சப்ளை செய்தார்.
கடந்த ஜனவரி மாதம், சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது, செல்வம் விற்பனை செய்த டீத்தூளில் ஆவாரம் செடியின் இலை, ஏலக்காய் தோல் உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்திருப்பதும், செயற்கை சாயம் கலந்திருந்ததும் தெரிய வந்தது. எனவே, டீத்தூள் தயாரிப்பாளர், டீலர் மற்றும் விற்பனையாளர் மீது வழக்கு தொடர, உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
ஓமலூர், மேச்சேரி சுற்றுப்பகுதியில் விற்பனை செய்த, மகாவீர் ஃபுட் அன்ட் பேவரேஜ் டீத்தூள் பாக்கெட்டுகளை ஆய்வு செய்ததில், செயற்கை கலர் பயன்படுத்தியது தெரிய வந்தது. அந்த டீத்தூள் கொல்கத்தா பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பகுப்பாய்வில், டீத்தூளில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் உத்தரவுபடி கலப்பட டீத்தூள் தயாரித்த, சென்னை, மகாவீர் "ஃபுட் அன்ட் பேவரேஜ்' நிறுவன உரிமையாளர், ஓமலூரை சேர்ந்த விற்பனையாளர் செல்வம், அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment