Aug 26, 2013

தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகள் முடிவு இன்று தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பு

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள, குடிநீர் நிறுவனங்களில் எடுத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள், இன்று பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்பிக்கப்படுகிறது. "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்கள் குறித்த வழக்கு விசாரணையும் நடக்கிறது. குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அனுப்பப்படும், குடிநீர் தரமாக இல்லை என, தெரிய வந்ததால், சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தானாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஐ.எஸ்.ஐ., அனுமதி பெறாமலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும் செயல்பட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டு, தர பரிசோதனைக்குப் பின், செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யவும், குடிநீரின் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கவும், பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அனுமதியின்றி இயங்கும், "ஹெர்பல்', "பிளேவர்டு' குடிநீர் உள்ளிட்ட, எல்லா விதமான குடிநீர் நிறுவனங்களிலும், குடிநீர் உற்பத்தி, மார்க்கெட்டிங், விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறியும், இத்தகைய குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான வழக்கு, சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் (தென்மண்டலம்), இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில், தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட, குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று தாக்கல் செய்கிறது. "ஹெர்பல்', "பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்கள் குறித்த வழக்கும், இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் முடிவுகள் தூய்மையான தண்ணீர் வழங்குவதில், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment