Aug 20, 2013

ஆய்வகங்களில் "மைக்ரோ பயாலஜிஸ்ட்' இல்லை: குடிநீர், உணவு மாதிரிகள் பரிசோதிப்பதில் சிக்கல்

உணவு பாதுகாப்புத்துறை ஆய்வகங்களில், மைக்ரோ பயாலஜிஸ்ட் (நுண்ணுயிரியாளர்) இல்லாததால், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி எடுக்கப்படும் குடிநீர் மாதிரிகள் மற்றும் உணவு மாதிரிகளை பரிசோதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர், தரமானதாக இல்லை என, தெரிய வந்ததால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்), தாமாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியில்லாத குடிநீர் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. பின், குடிநீர் மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில், குடிநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழகம் முழுவதும் குடிநீர் மாதிரிகள் எடுத்து வருகின்றனர். இவற்றை, உணவு பாதுகாப்புதுறை, தனது ஆய்வுகள் மூலம், பரிசோதித்து அறிக்கை தர வேண்டும். பீகாரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் மரணம், நாமக்கல் மாவட்டத்தில் வாந்தி, பேதி பாதிப்பைத் தொடர்ந்து, சத்துணவின் தரத்தையும் கண்காணிக்கும் பொறுப்பு, உணவு பாதுகாப்புத்துறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில், சென்னை (கிண்டி), சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை என, ஐந்து இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன. இதில், பல நிலைகளில் ஆய்வாளர்கள் இருந்தாலும், சென்னை தவிர மற்ற இடங்களில், மைக்ரோ பயாலஜிஸ்ட் (நுண்ணுயிரியாளர்) இல்லை. இந்த இடங்கள் காலியாகவே உள்ளதால், குடிநீர் மாதிரிகள், உணவு மாதிரிகள் எடுத்தாலும், உரிய பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐந்து - ஆறு மாவட்டங்களுக்கு ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குடிநீர், உணவின் தரம் சார்ந்த பரிசோதனைக்கான, மைக்ரோ பயாலஜிஸ்ட் பற்றாக்குறை உள்ளது உண்மைதான். தற்போது, டி.என்.பி.எஸ்.சி., மூலம், இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கோவை, மதுரை ஆய்வகங்களில் நியமிக்கப்பட உள்ளனர். மற்ற ஆய்வகங்களுக்கு, பொது சுகாதாரத்துறையிலிருந்து, வாரத்திற்கு ஒரு நாள் பணி மாற்ற முறையில், மைக்ரோ பயாலஜிஸ்ட்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறோம். விரைவில் இந்த சிக்கல்கள் தீரும். இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment