Aug 12, 2013

நிகோட்டின் சோதனைக்கு பின் "ரெய்டு' உணவு பாதுகாப்பு அதிகாரிகள் "ஐடியா'

மேட்டூர்: பகுப்பாய்வு மூலம், புகையிலை பொருட்களில் நிகோட்டின் இருப்பதை உறுதி செய்த பின், கடைகளில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் புகையிலை, பான்மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஜூன், 22 முதல், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்கள், ஆய்வாளர்கள் கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்த பான்மசாலா, குட்காவை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ஜூலை, 30ம் தேதி, உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கையில், "உணவு பொருட்களில் புகையிலை மற்றும் நிகோட்டின் கலக்காமல் இருப்பதை உறுதி செய்வதே தடை ஆணையின் நோக்கம். பான்பராக், குட்காவுக்கான தடையை காரணம் காட்டி, உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு உள்படாத புகையிலை தயாரிப்பாளர்கள், வணிகம் செய்வோரை துன்புறுத்த கூடாது. வணிகம் செய்பவர்களிடத்தில் பொருட்களை பறிமுதல் செய்வதோ, பயமுறுத்துவதோ கூடாது' என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் புதிய முறையில் நடவடிக்கைக்கு மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
விழுங்காமல், வாயில் வைத்து மென்றால் கூட உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதால், புகையிலை உணவு பொருளாகி விடுகிறது. மேலும், போதை பொருள் தடுப்பு சட்டத்தின்படி, நிகோட்டின் கலந்த கலந்த உணவு பொருட்கள் விற்பனையை தடை செய்ய முடியும். புகையிலையில் இயற்கையாவே நிக்கோட்டின் கலந்துள்ளது. இதனால், பறிமுதல் செய்த பான்பராக், குட்கா, பாக்கெட் புகையிலை சாம்பிள் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில், ஒவ்வொரு போதை வஸ்துகளிலும், எத்தனை சதவீதம் நிக்கோட்டின் கலந்துள்ளது என்பது, ஆதாரபூர்வமாக தெரிந்து விடும். அதன் பின், கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, புகையிலை சார்ந்த போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. nice blog !! i was looking for blogs related of Fssai License . then i found this blogs, this is really nice and interested to read.

    ReplyDelete