Jul 3, 2013

குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகள் பரிசோதிக்க தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: "தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்களில், மாதிரிகள் எடுத்து தரப் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தர பரிசோதனையில் தேறிய, 29 நிறுவனங்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.

சென்னையில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர், பாதுகாப்பற்றது என, தெரிய வந்ததால், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தானாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்பட்ட, 92 குடிநீர் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதில், தர பரிசோதனையில் தேறிய, 51 நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. மீதமுள்ள, 41 நிறுவனங்களில், இரண்டாம் கட்டமாக குடிநீர் மாதிரி எடுத்து, தர பரிசோதனை செய்யவும், மாநிலம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனங்களுக்கு, "நோட்டீஸ்' அளிக்கவும், பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. பசுமைத் தீர்ப்பாயத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இரண்டாவது முறையாக எடுத்த குடிநீர் நிறுவனங்களின் தர பரிசோதனை முடிவுகளையும், மாநிலம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்தது.

அதன் பின், தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்த ஆய்வறிக்கையின்படி, தீர்ப்பாயம் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட, 41 நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள், இயங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளன. 29 நிறுவனங்களின் குடிநீர் மாதிரி, பாதுகாப்பானது என, தெரிய வந்து உள்ளதால், அவற்றை செயல்பட அனுமதிக்க வேண்டும். நான்கு நிறுவன மாதிரி பாதுகாப்பற்றதாகவும், ஐந்து நிறுவனங்களின் மாதிரி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த நிறுவனங்களுக்கு, மாசுக்கட்டுபாட்டு வாரியமும், உணவு பாதுகாப்புத் துறையும் ஆலோசனை வழங்கி, பாதுகாப்பான, தரமான குடிநீரை தயாரிக்கச் செய்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள, 997 குடிநீர் நிறுவனங்களில், வாரிய அனுமதி பெறாத, 855 நிறுவனங்களில், 753 நிறுவனங்களுக்கு, "நோட்டீஸ்' தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், வாரிய அனுமதி பெறாத அனைத்து நிறுவனங்களின் குடிநீர் மாதிரிகளை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்து, ஆகஸ்ட், 26ல், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, ஆக., 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment