Jun 23, 2013

ஹோட்டல், இறைச்சிக் கடைகளில் திடீர் சோதனை

தருமபுரியில் உள்ள ஹோட்டல், இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்குவதாகவும், இறைச்சிக் கடைகளில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி உத்தரவிட்டார்.
இதன்படி, தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் பி. தினேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சி. கோபிநாத், ஏ.குமணன் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் தருமபுரி நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உரிமம் பெற்றுள்ளனரா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா, சமையல் கூடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா, பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவச் சான்று பெற்றுள்ளனரா என்பது குறித்து சோதனை செய்தனர்.
இறைச்சிக் கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி அறுவை செய்யப்படுகிறதா, கலப்படம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறதா, பழைய இறைச்சிகளை விற்பனை செய்கின்றனரா என்பது குறித்து சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக, மாவட்ட நியமன அலுவலர் பி. தினேஷ் கூறியது:
மாவட்ட ஆட்சியர் உத்தரவைத் தொடர்ந்து தருமபுரியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், உணவகங்களில் சனிக்
கிழமை சோதனை நடத்தியுள்ளோம். இறைச்சிக் கடைகளிலும் சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். குறைபாடுகள் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்ட கடைகளில் 15 நாள்களுக்குப் பிறகு மீண்டும் சோதனை நடத்தப்படும். அப்போது, குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அந்த நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளும் 4.2.2014-க்குள் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment