Jun 27, 2013

பல்பொடி போன்றும் பான், குட்கா விற்பனை பரிசோதனைக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி


சென்னை:பல்பொடி போன்று தூளக்கியும், புது வித பிராண்டுகளிலும் பான், குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்துச் சுவைக்கும் புகையிலை பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கிடங்குகளில் உள்ள, இருப்பை காலி செய்ய தரப்பட்ட ஒரு மாத அவகாசமும் முடிந்த நிலையில், நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
மாவட்டம் தோறும், உணவுப் பாதுகாப்புத் துறையினர், சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, கடைகளில் சோதனை நடத்தினர். விற்பனைக்குப் பதுக்கி வைத்திருந்த பான், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசு தடை விதித்துள்ளதால், குட்கா, பான் மசாலா விற்பனை கூடாது எனவும், மீறினால் பறிமுதல் மட்டுமின்றி, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
சென்னையில், 96 கடைகளில் சோதனை நடந்தது. பல இடங்களில் இதுவரை இல்லாத வகையில், புதிய புதிய பிராண்டுகளில் பெயர் மாற்றி விற்பதும், பல் பொடி (தூள்) போன்று விற்பது கண்டும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சவுகார்பேட்டை பகுதியில் மட்டும், 15 கிலோவும், பிற பகுதிகளில், 5 கிலோ என, 20 கிலோ பொருட்கள் (4,900 பாக்கெட்டுகள்) பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும், 450 கிலோவுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதற்கட்ட சோதனையில், விற்பனைக்குப் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விற்கும் பட்சத்தில், அபராதம் விதிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைத் துவங்கும்.
கிடங்குகள் மீதும் கவனம் செலுத்தப்படும். கலெக்டர் தலைமையில் உள்ள குழு, பிற துறைகளின் ஒருங்கிணைப்போடும், குட்கா, பான் பொருட்கள் விற்பனை தடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment