May 27, 2013

உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சென்னை நிறுவனம் சிக்கியது தேங்காய் நார், ஆவாரம் பட்டை' டை’ கலந்து டீத்தூள் விற்பனை

சேலம், மே 26:
சென்னையை சேர்ந்த போலி டீத்தூள் நிறுவனம் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பேக்கரி, காபி பார்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பரவலாக போலி டீத்தூள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. விசாரணையில், ஓமலூரை சேர்ந்த முகவர் மூலம் சேலம் டீக்கடைகளுக்கு ‘கோல்டு ஸ்டார்’ என்ற பெயரில் போலி டீத்தூள் சப்ளை செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஓமலூரில் உள்ள முகவரின் அலுவலகத்தில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த போலி டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அயனாவரத்தில் உள்ள நிபுமா என்பவரிடம் இருந்து போலி டீத்தூள் பாக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, கோல்டு ஸ்டார் டீத்தூள் மாதிரிகள் கிண்டியில் உள்ள உணவுப்பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில், இந்த டீத்தூளில் தேங்காய் நார், ஆவாரம் செடியின் இலை, பட்டை, ஏலக்காய் தோல், தலைக்கு பூசக்கூடிய டை, செயற்கை நிறமூட்டிகள் கலந்திருப்பது தெரியவந்தது.
பரிசோதனை அறிக்கையை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோல்டு ஸ்டார் டீத்தூள் அதிபர் நிபுமாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவுகளை ஏற்க முடியாது என ஆட்சேபனை தெரிவித்ததால், டீத்தூளின் மற்ற மாதிரிகளை கொல்கத்தாவில் உள்ள தலைமை உணவுப்பகுப்பாய்வு கூடத்திற்கு மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்தும், அது கலப்பட டீத்தூள்தான் என்று அறிக்கை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கோல்டு ஸ்டார் டீத்தூள் அதிபரை முதல் குற்றவாளியாக சேர்த்து, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒப்புதல் கேட்டு, தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் (பொறுப்பு) குமார் ஜெயந்துக்கு விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவிடம் கேட்டபோது, ‘‘டீத்தூளில் எந்த வித செயற்கை நிறமூட்டிகளும் சேர்க்கக் கூடாது. ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட கோல்டு ஸ்டார் டீத்தூளில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் 1950 பிபிஎம் (பார்ட்ஸ் பெர் மில்லியன்) வரை செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்டு இருந்தது.
இத்துடன் தேங்காய் நார் போன்ற பொருட்களும் கலந்திருந்தன. மேலும், டீத்தூள் பாக்கெட்டில் ‘சர்பத்’ என அச்சிட்டுக்கொண்டு, டீத்தூள் விற்பனை செய்ததும் குற்றம். இதனால் கோல்டு ஸ்டார் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு, இத்துறையின் கமிஷனரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்,’’ என்றார்.

No comments:

Post a Comment